கார்த்திக் சுப்புராஜ் – தனுஷின் “டி-40” படப்பிடிப்பு நிறைவு


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் டி-40. திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனுசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் சுமார் 70 நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பழனி அருகில் உள்ள கோம்பைபட்டியில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், படத்தில் பணியாற்றியது குறித்து நடிகர் தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
“நான் நடித்ததிலேயே விரைவாக முடிவடைந்த படம் இதுதான். கார்த்திக் சுப்புராஜ் போன்ற விவேகமான, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய இயக்குனருடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பானது” என்று பாராட்டியுள்ளார்.

சூப்பர்ஸ்டாரின் பேட்ட திரைப்படத்தை வெற்றிப்படமாக கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனுசை வைத்து இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.