நம்பியாருக்கு நூற்றாண்டு விழா ரஜினி, கமல் – பங்கேற்பு

தமிழ் பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ள நம்பியார் நிஜ வாழ்க்கையில் தீவிர அய்யப்ப பக்தர். ஒவ்வொரு வருடமும் தவறாமல் சபரிமலைக்குச் சென்ற நம்பியார் குருசாமியாகவும் திகழ்ந்தார்.

எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.

கடந்த 2008-இல் 89வது வயதில் நம்பியார் நம்மை விட்டு பிரிந்தார். தமிழ்த் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்தது.

தற்போது அவரை கவுரவிக்கும் வகையில் அவரைப்பற்றிய 30 நிமிட ஆவண படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சூர்யா என்பவர் இயக்கி உள்ளார். இவர் இயக்குநர் கவுதம் மேனனின் உதவியாளர்.

நம்பியாரின் வாழ்க்கை, அவர் நடித்த திரைப்படங்கள், ஆன்மிக ஈடுபாடு ஆகிய விஷயங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தை வெளியிடும் நிகழ்ச்சியும் நம்பியாரின் நூற்றாண்டு விழாவும் வருகிற 19-ம் தேதி சென்னை மியூசிக் அகடமியில் நடக்கிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சிவகுமார் ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.

விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, நம்பியார் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் நம்பியார் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.