ஆண்டவன் கட்டளை – விமர்சனம்

அரசு அலுவலகங்களில் உங்களுக்கு ஆகவேண்டிய வேலைகளை முடிக்க, அதிகாரிகளை நீங்களே நேரடியாக அணுகுங்கள்.. புரோக்கர் வேண்டாம் என்பதை கனகச்சிதமாக பொட்டில் அடித்தமாதிரி சொல்லியிருக்கும் படம் தான் ஆண்டவன் கட்டளை.

கிராமத்தில் நிறைய கடன் வாங்கி வைத்துவிட்ட விஜய்சேதுபதி, வெளிநாடு சென்று சம்பாதித்து கடனை அடைக்கலாம் என்கிற கனவில் தனது நண்பன் யோகிபாபுவுடன் சென்னைக்கு வருகிறார். இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் ட்ராவல் ஏஜெண்ட் எஸ்.எஸ்.ஸ்டேன்லி, இவர்கள் பெயரில் போலி விபரங்களை கொடுத்து பாஸ்போர்ட் வாங்கி தருகிறார். அதில் மனைவி என்கிற பெயரில் குத்துமதிப்பாக எதோ ஒரு பெண் பெயரை குறிப்பிடுகிறார் விஜய்சேதுபதி.

இந்தநிலையில் யோகிபாபுவுக்கு விசா கிடைத்து லண்டன் செல்ல, விஜய்சேதுபதிக்கு விசா மறுக்கப்படுகிறது.. இடைப்பட்ட காலத்தில் நாடகக்குழு நடத்தும் நாசரிடம் வேலை பார்க்கும் விஜய்சேதுபதிக்கு நாடகக்குழுவினருடன் லண்டன் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.. ஆனால் பாஸ்போர்ட்டில் உள்ள மனைவி பெயர் நாசரிடம் தன் குட்டை உடைத்துவிடும் என்பதால் அந்த பெயரை நீக்க முயற்சிக்கிறார்..

வக்கீல் கொடுத்த ஐடியாவின்படி அதேபெயரில் உள்ள பெண் ஒருவரை அழைத்துவந்தால் டைவர்ஸ் வாங்கலாம் என தேடலை ஆரம்பிக்கிறார் விஜய்சேதுபதி.. சேனல் ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலைபார்க்கும் ரித்திகா சிங் அதே பெயரில் இருக்க அவரது உதவியை நாடுகிறார்.. அதற்கும் சில பொய்களை சொல்லிவைக்க, அது விஜய்சேதுபதியையும் ரித்திகா சிங்கையும் எண்ணற்ற சிக்கலில் மாட்டிவிடுகிறது.. அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

விஜய்சேதுபதியை பொறுத்தவரை எந்த கேரக்டரில் நடித்தாலும் அதுவாகவே மாறிவிடும் இயல்பு கொண்டவர்.. இந்தப்படத்திலும் அந்த மேஜிக் தொடருகிறது.. விபரீதம் தெரியாமல் ஒவ்வொரு இடங்களிலும் சூழ்நிலை காரணமாக தேவையில்லாமல் பொய்சொல்லி, பின்னால் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகளில் விஜய்சேதுபதி பின்னுகிறார். குறிப்பாக ஊமையாக நடிக்கும் காட்சிகளில் அவராக ஒரு ஊமை பாஷையை அடித்துவிடுகிறாரே.. யப்பா.. என்னா ஆள்டா சாமி இவரு..?

கண்ணுக்கு குளிர்ச்சியாக ரித்திகா சிங்.. முதல் படத்தில் இருந்த உக்கிரம் இதிலும் தொடர்கிறது.. இடைவேளைக்கு முன் இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமே தலைகட்டினாலும், இடைவேளைக்குப்பின் படத்தை தனது கையில் எடுத்துக்கொள்கிறார். நாடக குழுவில் நடிக்கும் பெண்ணாக வரும் பூஜா தேவார்யாவுக்கு வேலை குறைவென்றாலும் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்.

சோலோ காமெடியனாக இதில் இன்னும் ஒரு படி முன்னேறியிருக்கிறார் யோகிபாபு.. இடைவேளைக்கு முன்புவரை அவ்வப்போது ஊசிப்பட்டாசாய் சிதறி, நம்மை சிரிக்கவைப்பவரை பாதியிலே லண்டனுக்கு அனுப்பி வைத்து ஏமாற்றம் தந்திருக்கிறார்கள். விஜய்சேதுபதியுடன் படம் முழுவதும் கூடவே சுற்றும் இலங்கை அகதியாக நடித்துள்ள நபர், தனது யதார்த்த நடிப்பால்.. அட யார் இவர்? என கவனம் ஈர்க்கிறார். ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் சிங்கம்புலி சென்னையில் வீட்டு வாடகை என்கிற பெயரில் கொளையடிக்கும் அவலத்தை நகைச்சுவையாக சுட்டி காட்டியுள்ளார்.. வழக்கம்போல கத்திப்பேசாத அவரது அமைதியான நடிப்பு சூப்பர்.

நாடக குழு நடத்தும் நாசர், போலி ட்ராவல் ஏஜென்ட்டாக எஸ்.எஸ்.ஸ்டேன்லி, விஜய்சேதுபதியின் மாமாவாக வரும் ஏ.வெங்கடேஷ், வக்கீல்களாக வரும் ஜார்ஜ், வினோதினி ஆகியோர் அனைவரும் சூழல் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.. கடைசி கால்மணி நேரம் மட்டுமே விசாரணை அதிகாரியாக வரும் மலையாள நடிகர் ஹரீஷ் பெராடி படத்தின் விறுவிறுப்பை கூட்டுவதோடு, அதிர்ந்து பேசாத நடிப்பால் நம்மை பதறவைக்கிறார்.

நம் வசதிக்காக அரசிடம் பெறவேண்டிய சான்றிதழ்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிப்பது எந்தவிதத்தில் நம்மை பிரச்சனையில் மாட்டிவிடும் என்பதை காட்சிக்கு காட்சி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். சென்னையில் சொந்த வீட்டை வைத்து கொண்டு வீட்டு உரிமையயாளர்கள் செய்யும் அராஜகங்களையும் தோலுரித்து காட்டியதும் அருமை.. தமிழ்நாட்டில தமிழ்ல பேசுறது தப்பா என்பது போன்ற சாட்டையடி வசனங்களில் சபாஷ் பெறுகிறார்.

எந்த வேலையாக இருந்தாலும், இடைத்தரகர்களை நம்பாது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாமே நேரில் அணுகுவதுதான் முறையானது என்பதையும் நிம்மதியானது என்பதையும் மனதில் உறைக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்..

இனி யாராவது பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு ஆவணங்களுக்காக விண்ணப்பிக்கும்போதும், வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யும்போதும், இந்தப்படத்தின் நாயகன் விஜய்சேதுபதியை ஒரு கணம் நினைத்துகொண்டு தாங்களே நேரடியாக களத்தில் இறங்கினால் போதும். அதுவே இந்த ஆண்டவன் கட்டளைக்கு கிடைத்த வெற்றி தான்.

Rating: 4/5

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *