அட்டு – விமர்சனம்

“ஸ்டுடியோ 9” R.K.சுரேஷ் பெருமையுடன் வழங்க ‘ட்ரீம் ஐக்கான்’ பிலிம் புரொடக்ஷன் S.அன்பழகன் தயாரிப்பில் ரத்தன் விங்கா எழுத்து, இயக்கத்தில் புதுமுகங்கள் ரிஷி ரித்விக் – அர்ச்சனா ரவி ஜோடியுடன், யோகி பாபு, தீனா, பிரபு, ராஜசேகர் ஆகியோர் நடிக்க, “கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு” எனும் மெஸே ஜுடன் வந்திருக்கும் படம் தான் “அட்டு”.

வன்முறைக்கு பெயர் டோன வட சென்னை ஏரியாவில், சின்ன வயதிலேயே தனக்கு பிடித்த தாதா விற்காக அவரது ஆப்போசிட் தாதாவை அறுத்து போட்டுவிட்டு சில, பல வருடங்கள் ஜெயிலுக்கு போய் திரும்பும் அநாதை அட்டு, மற்றவர்கள் சுவாசம் செய்ய யோசிக்கும் அப்பகுதியின் ஒதுக்குபுறமான குப்பை கழிவுகள் பகுதியி லேயே நண்பர்களுடன் குஷியாக வாசம் செய்கிறார்.

சின்ன சின்ன பஞ்சாயத்துக்கள், வெட்டு குத்துக்கள்… என தன்னை அந்த ஏரியா லீடராக காட்டிக் கொள்ளும் அட்டு மீது, சிறு வயதில் தன் மானத்தையும் கற்பையும் காபந்து செய்தவன்… எனும் கூடுதல் குவாலி பிகேஷனுக்காக ஒன் சைடு லவ்வில் இருக்கிறார் அந்த ஏரியா பக்கோடா வியாபாரியின் மகளான நாயகி சுந்தரி.

அட்டு விற்கும் அவர் மீது காதல் வரும் வேளையில் பெரிய அளவில், போதை வியாபரம் செய்யும் பக்கத்து ஏரியா தாதா ஜெயா, ஒரு நாள் போலீஸ் சேஸில், போலீஸுக்கு பயந்து குப்பை லாரியில் போட்டு அனுப்பிய பல கோடி மதிப்புள்ள சரக்கு, குப்பை மேட்டு அட்டுவின் வசம் சிக்க, அதை வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டும் அட்டு வையும் அவரது நண்பர்களையும் போட்டுத்தள்ளி சரக்கை கைப்பற்ற களம் இறங்குகிறார் ஜெயா.

ஜெயாவிடமிருந்து அட்டு எஸ்கேப் ஆனாரா? காதலி சுந்தரியை கரம்பற்றினாரா…? ஜெயா மட்டும் தான் அட்டுக்கு எதிரியா…? காதலாலும், காசு பண ஆசையாலும் நட்புகள் செய்த தப்பு என்ன…? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு சீனு சீனுக்கு வட சென்னையின் தாதாயிச வாசனையுடன் செமயாய் பதில் சொல்கிறது “அட்டு” படத்தின் மீதிக் கதையும், களமும்.

அட்டு வாக அழுக்கான குப்பை மேட்டுவாசியாக நடை, உடை, பாவனை என சகலத்திலும் நார்த் மெட்ராஸ் ரவுடிகளை நம் கண் முன் நிறுத்துகிறார் புதுமுகம் ரிஷி ரித்விக். ரவுடிக்கும் காதல் மெல்ல, மெல்ல தான் வரும்… எனும் காட்சிகளில் வெட்கமாகவும், விவேகமாகவும் நடித்திருக்கும் ரிஷி, அசால்ட்டாய் அசால்ட் செய்யும் காட்சிகளில் அசத்தியிருப்பது இப்படத்திற்கும் கதைக்கும் பலம் சேர்க்கிறது. என்ன தான் ரவுடி, தாதா… என்றாலும் இறுதியில் அவருக்கு நண்பரின் காதலால் ஏற்படும் முடிவு படம் பார்க்கும் ரசிகனை கண் கலங்க வைக்கும் கொடூரம்.

அட்டு மீது அளப்பரிய காதல் கொண்டிருக்கும் பக்கோடா வியாபாரியின் மகளான சுந்தரி யாக அறிமுக நாயகி அர்ச்சனா ரவி அசத்தியிருக்கிறார்.

அட்டுவின் நண்பர்கள் சப்ப யாக யோகி பாபு, உளுவ யாக பிரபு, தாஸ் ஆக ராஜசேகர் மற்றும் போதை தாதா ஜெயா வாக தீனா, ஆகியோர் நடிப்பும், அட்டுவின் ஆசானாக, பழைய தாதாவாக, அவரது வலது கைபாயாக, பெரியவராக வரும் பைட் மாஸ்டர்கள் உள்ளிட்ட எல்லோரும் வட சென்னை வாசிகளான ரவுடிகளை நம் கண் முன் நிறுத்துவது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

பவர் பாண்டியன் – ஆசானின் அதிரடி கண்டை காட்சிகள். அட்டுக்கு கூடுதல் ஓட்டு அளிக்கின்றன.

எல்வி கே தாஸின் படத்தொகுப்பில் கத்திரி அட்டுவின் கத்தி மாதிரி இன்னும் கொஞ்சம் ஷார்ப் பாய் இருந்திருக்கலாம்.

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு அழுக்கு வட சென்னையையும் அழகாய் படம் பிடித்திருக்கிறது.

போபோ சசி யின் இசையில், “ஒரக்கண்ணால் என்னை பார்த்தாலே… “, “வாழ்க்கை எனும் நாடகத்தில்…” உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் மிரட்டல்.

ரத்தன் விங்கா எழுத்து, இயக்கத்தில், ஆங்காங்கே ஒரு சில லாஜிக் குறைகள், ஹீரோயிச மேஜிக் காட்சிகள்… இப்படத்திலும் காணப்பட்டாலும், “கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு” எனும் மெஸே ஜுக்காகவும், வட சென்னை வாழ் இளைஞர்கள் சிலர், ரவுடியாகவும், தாதாவாகவும் வாழ்க்கையை தொலைத்த விதத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் காட்சி படுத்தியமைக்காகவும் “அட்டு” படத்தை பார்க்கலாம். படிக்கலாம்!

ஆக மொத்தத்தில் “அட்டு’ – ஒடும் தியேட்டர்களுக்கு, பெருவாரியான ரசிகர்கள் போலாம் ‘ரைட் , ரைட்டு!”