அவள் – விமர்சனம்

ஹாரர் பட சீசனில் ஒரு சிறிய இடைவெளிவிட்டு வெளியாகி இருக்கும் ‘அவள்’ திரைப்படம் எந்தமாதிரி வித்தியாசத்துடன் ரசிகர்களை கவர வந்துள்ளது..? பார்க்கலாம்.

இமயமலை அடிவாரத்தில் உள்ள ஊரில் மனைவி ஆன்றியாவுடன் வசிக்கிறார் டாக்டரான சித்தார்த், அவர் வெட்டிற்கு எதிர்வீட்டில் குடிவரும் அதுல் குல்கர்னி வீட்டில் நாளுக்கு நாள் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஒரு பாதிரியார் மூலமாகவும், ஒரு மாந்த்ரீகர் மூலமாகவும் அந்த வீட்டில் சில ஆவிகள் இருப்பதும், அவை அதுல் குல்கர்கனி குடும்பத்தையே வீட்டை விட்டு வெளியே துரத்த முயற்சிப்பதும் தெரிய வருகிறது.

ஆனல் அதேசமயம், அதே வீட்டில் இருக்கும் இனொரு ஆவி அவர்களை வெளியேறவிடாமல் தடுப்பதும் தெரிய வருகிறது.. இந்த இரண்டுக்கும் காரணம் என்ன, ஆவிகளின் பிடியில் இருந்து அதுல் குல்கர்னியின் குடும்பம் தப்பித்ததா, இவர்கள் விவகாரத்தில் சித்தார்த்தின் தலை எப்படி உருள்கிறது என விறுவிறுப்பான கேள்விகளுக்கு பல திருப்பங்களுடன் விடை சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு அழுத்தமான வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த்துக்கு இந்தப்படம் நம்பிக்கை கொடுத்துள்ளது. டாக்டர் கேரக்டரில் இயல்பாக பொருந்தியுள்ள அவர், பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிப்பில் துடிப்பு காட்டியுள்ளார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் ரொம்பவே ரிஸ்க் எடுத்துள்ளார் சித்தார்த்.

ஆண்ட்ரியா இறங்கி அடித்திருக்கிறார். சித்தார்த்துடன் அவர் லிப் கிஸ் காட்சிகளில் காட்டும் ரொமான்ஸ், ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடுகிறது. அதுல் குல்கர்னி, சுரேஷ் ஆகியோர் கதையுடன் பயணிக்கும் கனமான கதாபாத்திரங்கள்.. அதுல் குல்கர்னியின் மகளாக ஜெனி கேரக்டரில் வரும் அனிஷா விக்டர் தனது நடிப்பால் நம்மையும் சேர்த்து மிரட்டுகிறார்.

பேய் பற்றிய பிளாஸ்பேக் காட்சிகளும் அதை காட்சிப்படுத்திய விதமும் மிகவும் நேர்த்தி.. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் கிரிஷின் பின்னணி இசையும் படத்தை ஹாலிவுட் தரத்திலான தமிழ்ப்படமாக மாற்றி இருக்கின்றன. படத்தில் பத்து இடங்களுக்கும் குறைவில்லாமல் ரசிகர்களை பயமுறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் மிலிந்த் ராவ். குறிப்பாக க்ளைமாக்ஸில் வைத்த அந்த ட்விஸ்ட் உண்மையிலேயே எதிர்பாராத ஒன்று.

பேய்ப்படங்களின் வெற்றி அவற்றிற்கான வித்தியாசமான பிளாஸ்பேக்கில் தான் அடங்கியுள்ளது என்பார்கள். அப்படி ஒரு வலுவான ‘பேய்ப்பின்னணி’யுடன் இந்த ‘அவள்’ படம் வெற்றிக்கான சகல அம்சங்களுடனும் வெளியாகியுள்ளது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *