தர்பார் – விமர்சனம்

மும்பையில் காவல்துறையினர் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்து காணப்படுகிறது. அதுவும் அங்கு ஒரு காவல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு காவல்துறையினர் மீது மக்களுக்கு நம்பிக்கையே இல்லை. இதனால் அங்கு பணிபுரியும் காவலர்கள் வேலையை விட்டு செல்லும் முனைப்பிலேயே இருக்கின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்ட்டாக இருக்கும் ரஜினிகாந்த்தை மும்பைக்கு மாற்றுகின்றனர். ரஜினிகாந்த் மூன்று கண்டிசன்களுடன் மும்பை போலீஸ் கமிஷனராக பதவியேற்கிறார்.
பதவியேற்றதும் போதை மருந்து கும்பலால் கடத்தப்பட்ட ஒரு அரசியல்வாதியின் மகளை காப்பாற்றுகிறார் ரஜினி. அதே போல் அந்தக் கும்பலிடம் சிக்கியிருக்கும் ஏராளமான இளம் பெண்களையும் காப்பாற்றுகிறார் ரஜினிகாந்த்.

மும்பை மாநகரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ரஜினி, இந்த போதை மருந்து கடத்தல் கும்பலின் பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க முயல்கிறார். இதில் ஒரு தொழிலதிபரின் மகனுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து அவனை கைது செய்கிறார் ரஜினி. தனக்கு இருக்கும் அதிகார பலத்தை பயன்படுத்தி தனது மகனை விடுவிக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார் தொழிலதிபர்.

இதற்கெல்லாம் அசராத ரஜினி, தன்னுடைய சாதுர்யத்தால் அந்த தொழிலதிபரின் மகனை கொல்கிறார். அதற்கு பின்னர் தான் தெரிய வருகிறது கொலை செய்யப்பட்டவன் தொழிலதிபரின் மகன் மட்டுமல்ல, உலகளவில் போதை மருந்து கடத்தல் செய்து வரும் தாதா சுனில் ஷெட்டியின் மகன் என்று. எதற்காக ரஜினி சுனில் ஷெட்டியின் மகனைக் கொன்றார்? மகனை இழந்த வில்லன் சுனில் ஷெட்டி, ரஜினியை என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படம் முழுக்க ரஜினிமயம். இந்த வயதிலும் அவருடைய எனர்ஜியை பார்த்து ரசிக்காதவர்களே இருக்க முடியாது. காதல், அப்பா-மகள் சென்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்‌ஷன் என அனைத்திலும் கலந்துகட்டி அசத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார். படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய தோள்களில் சுமந்துள்ளார் ரஜினிகாந்த். தன்னுடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்குமே ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேசனாக இருக்கிறார் ரஜினிகாந்த்.

நாயகி நயன்தாரா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார். ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸ் தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கும் யோகி பாபு, படத்தின் முதல் பாதியில் பல இடங்களில் வருகிறார். யோகி பாபு தான் தோன்றும் காட்சிகள் அனைத்திலும் சிரிக்க வைக்கிறார்.

இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் வில்லன் சுனில்ஷெட்டி, தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

ரஜினி ரசிகரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒவ்வொரு காட்சியையும் ரஜினி ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார்.

முதல் பாதியில் காமெடி, ஆக்ஷன், இரண்டாம் பாதியில் சென்டிமெண்ட் என ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அவை அனைத்தும் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.

அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மற்றொரு மிகப்பெரிய பலம், ஒவ்வொரு பிஜிஎம்மையும் தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக ரஜினியின் என்ட்ரி செம மாஸ்.

சூப்பர்ஸ்டாரை செம ஸ்டைலிஷாக காட்டிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனை பாராட்டியே ஆக வேண்டும். கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

படம் பார்க்கும் அனைவரும் தங்கள் கவலைகளை மறந்து என்ஜாய் செய்வர் என்பது 100பர்சென்ட் உறுதி.

மொத்தத்தில் தரமான பொங்கல் விருந்தாக அனைவரையும் மகிழ்விக்க வந்துள்ளது “தர்பார்”.