தாயம் – விமர்சனம்


வித்தியாசமான ஒரு நிறுவனத்தின் அதிகாரி பதவிக்காக மூன்று பெண்கள் நான்கு ஆண்கள் உட்பட ஏழு பேர் ஒரு மிகப்பெரிய அறையில் இன்டர்வியூவுக்காக ஒன்று கூடுகிறார்கள்.. அவர்களை சந்திக்கும் அதிகாரி, முன்பு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் இந்தப் பதவிக்கு இன்னொருவர் வருவதை விரும்பாத அவரது ஆவி இப்போது இங்கு உலாவுவதாகவும் கூறுகிறார்..

மேலும் . உங்களை உள்ளே வைத்து பூட்டி விட்டு நாங்கள் வெளியே போய் விடுவோம் இன்னும் ஒரு மணி நேரம் அந்த அறைக்குள் இருக்கும்படியும் ஒருமணி நேரம் கழித்து யார் உயிருடன் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வேலை என்றும் ஏழு பேருமே உயிருடன் இருந்தால் ஏழு பேருக்குமே வேலை என்றும் சொல்லிவிட்டு அவர்கள் வெளியே வரமுடியாதவாறு கதவை அடைத்துவிட்டு செல்கிறார்..

எதற்காக இப்படி ஒரு விஷப்பரீட்சை..? இதற்கு எப்படி அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்..? அப்படி ஒரு மணி நேரத்தில் மரணத்தை கொண்டுவரக்கூடிய என்ன பயங்கரம் அந்த அறையில் ஒளிந்திருக்கிறது என்பதுதான் மீதிக்கதை..

முற்றிலும் புதியவர்களை கொண்டு ஒரு புது முயற்சியாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி.. படம் முழுவது ஒரே அறையில் நடப்பதுதான் புதுமை.. ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒவ்வொருவராக மரணத்தை தழுவ இடைவேளை வரை ஒரு திகில் நம் மீது படர்வது உண்மை தான்.

ஆனால் போகப்போக படம் எதை நோக்கி போகிறது.. ஏன் ஒருவருக்கொருவர் வேலை-பதவிக்காக மற்றவர்களை கொல்ல துடிக்கிறார்கள் என்கிற குழப்பம் சாதாரண ரசிகனுக்கு எழவே செய்யும்.. க்ளைமாக்ஸில் மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் என்கிற பலவித குணாதிசய கற்பனைக் குறைபாட்டுக்கான மன நல சிகிச்சை என ஏதேதோ சொன்னாலும் கூட அதை இன்னும் சற்று புரியும்படியாக சொல்லியிருக்கலாமே..

படத்தில் நடித்துள்ள யாருக்கும் கதாபாத்திர பெயர்களை கொடுக்காமல் இன்னொரு புதுமையை கையாண்டுள்ளார் இயக்குனர்.. இதில் முக்கியமாக சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பு பாராட்டு விதமாக அமைந்துள்ளது. மற்ற கேரக்டர்களான ஜெயக்குமார், ஜீவா ரவி, ஷியாம் கிருஷ்ணன், ‘காதல்’ கண்ணன், அஜய், ஐரா அகர்வால், அன்மோல் சந்து, ஆஞ்சல் சிங், சந்தீப், சுபாஷ் செல்வம், ஜெய் தேவ், அருள், சஹானா ஆகியோரும் தங்களது இருப்பை பதியவைக்க முயற்சிக்கிறார்கள்.

பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இசையமைப்பாளரான சதீஷ் செல்வம். கண்ணன் ரங்கசாமியின் முயற்சி வரவேற்கத்தக்கது.. சுற்றி உள்ள எல்லோரையும் எல்லாவற்றையும் அடித்து அழித்து, தான் மட்டும்தான் முன்னேறுவதுதான் கார்பரேட் கலாச்சாரதை படம் முழுவதும் மெல்லிசாக சாடிக்கொண்டே இருக்கிறார்கள்.. என்றாலும் இன்னும் கொஞ்சம் பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்திருந்தால் இந்த ‘தாயம்’ ஆட்டம் இன்னும் கூடுதல் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்..