ஹவுஸ் ஓனர் – விமர்சனம்


சென்னையில் மழை செய்து கொண்டிருக்கும் ஒரு நாளில் கதை துவங்குகிறது. ரிட்டையர்டு ஆர்மி மேன் கிஷோர் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி. தன்னை யார் என்றே கணவர் கிட்டத்தட்ட மறந்து விட்ட நிலையிலும் அவரை ஒரு குழந்தை போல பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார் ஸ்ரீரஞ்சனி. இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மழை அதிகரிக்க, பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களை வேறு இடத்திற்கு பத்திரமாக வந்து தங்குமாறு அழைக்கிறார்கள். ஸ்ரீரஞ்சனி வீட்டை விட்டு செல்ல விரும்பினாலும் கிஷோர் அந்த வீட்டிலிருந்து வர மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறார்.

வேறுவழியின்றி ஸ்ரீ ரஞ்சனியும் அந்த வீட்டிலேயே தங்கிவிட, நேரம் ஆக ஆக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. வாசல் கதவு சாவியை தொலைத்து விட்டு கதவைத் திறக்க முடியாமல் ஒருபக்கம் ஸ்ரீரஞ்சனி அவதிப்பட, இன்னொரு பக்கம் தன்னையே தன்னால் கவனித்துக் கொள்ள முடியாத கிஷோர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தண்ணீரில் சிக்கிக்கொள்கிறார். அறைக்குள் அடைபட்டு காப்பாற்றும்படி கதறிக்கொண்டிருக்கும் மனைவியையும் கவனிக்க தோன்றாமல் அலை பாய்கிறார். இறுதியில் தம்பதிகள் தப்பித்தார்களா இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னையை புரட்டிப்போட்ட பெரும் மழை வெள்ளத்தில் பல வீடுகள் மூழ்கின. பலர் உயிரிழந்தனர். அப்படிப்பட்ட கோர நிகழ்வை அவர்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை மிக அழகாக துல்லியமாக படம்பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆதர்ச தம்பதிகளாக மறதி நோயால் பாதிக்கப்பட்ட கிஷோரும் அவரது மனைவியாக ஸ்ரீரஞ்சனியும் மிகப் பொருத்தமான தேர்வு. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை பதைபதைக்க வைத்து விடுகிறார்கள்.. இருவருக்குமே இந்த படத்தின் மூலம் விருதுகள் காத்திருக்கின்றன.

இவர்களது இளம்வயது கதாபாத்திரங்களாக பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் சந்திரசேகர் என இளஞ்சோடிகள் இளமை துள்ளலுடன் ஞாபகமறதி கிஷோரின் ஃப்ளாஷ்பேக் நினைவலைகளில் அவ்வப்போது வந்து செல்கின்றனர். அதில் பெரிய அளவில் படிப்பறிவில்லாத தனது மனைவி மீது பசங்க கிஷோர் எவ்வளவு கருத்தாக, பாசமாக இருக்கிறார் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள்.. பின்னாளில் ஸ்ரீரஞ்சனி ஞாபக மறதி கணவரை குழந்தையாய் அவர் தாங்கிப்பிடிப்பதற்கு அந்த காட்சிகள் ஆதாரமாக விளங்குகின்றன.

படம் முழுவதும் மழை பெய்யும் ஒரு சூழலில் நாமும் மாட்டிக்கொண்டது போன்ற உணர்வை அழகாக தந்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணா சேகரும் ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக்கும். குறிப்பாக கடைசி 20 நிமிட காட்சிகளில் இவர்களது பங்களிப்பு நம்மை திகிலில் உறைய வைக்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசையும் உடன் சேர்ந்து கொள்ள இறுதியில் என்ன ஆகுமோ என்கிற பதைபதைப்பு அதிகப்படுகிறது.. மழை வெள்ளத்தின் பாதிப்பையும் அதனூடாக ஆதர்சமான ஒரு வயதான தம்பதிகள் காதலையும் ஒன்று சேர்த்து சொல்ல முயன்றதில் இயக்குனராக வெற்றி பெற்று இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.