இவன் தந்திரன் – விமர்சனம்


கல்வியை பகடைக்காயாய் பயன்படுத்தி மாணவர்களிடம் காசுபறிக்கும் மத்திய அமைச்சரையே ஆட்டம் காண வைக்கும் இளைஞன் ஒருவனின் தில்லான போராட்டம் தான் ‘இவன் தந்திரன்’.

இஞ்சினீரிங் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்னை ரிச்சி தெருவில் தனிக்கதை வைத்து வாழ்க்கையை ஓட்டுபவர்கள் கவுதம் கார்த்திக்கும் அவரது நண்பர் ஆர்ஜே பாலாஜியும். ஆனால் எலெக்ட்ரானிக் விஷயங்களில் கவுதம் சூரப்புலி.

மத்திய அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்திவிட்டு, அதற்கான பணத்தை வாங்க அலையாய் அலைகிறார் கவுதம். ஆனால் பணம் தராமல் அவரை அலைக்கழிக்கிறார் மந்திரியின் மச்சானான சில்வா.

இது ஒருபக்கம் இருக்க சரியான வசதிகள் இல்லாத கல்லூரிகளை மூடச்சொல்லி திடீரென உத்திரவிடுகிறார் அமைச்சர் சூப்பர் சுப்புராயன்.. பின் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் இருந்து அவருக்கான கப்ப பணம் வந்ததும் அந்த உத்தரவு காற்றில் பறக்கிறது..

ஆனால் கல்லூரிகள் லஞ்சமாக கொடுத்த இந்த தொகை, மாணவர்கள் தலையில் எக்ஸ்ட்ரா கட்டணமாக விடிகிறது. பணம் கட்டமுடியாமல் ஒரு மாணவன் கவுதம் கார்த்திக் கண் முன்பாகவே தற்கொலை செய்துகொள்கிறான்.

தனது உழைப்புக்கு சில ஆயிரங்கள் தரவேண்டிய பணத்தை தராமல் இழுத்தடிக்கும் அமைச்சர், இப்படி மாணவர்கள் பணத்தை கோடிகோடியாக கொள்ளையடிப்பதையும் அதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதையும் கண்டு பொங்கும் கவுதம், தனது எலெக்ட்ரானிக் மூளையை பயன்படுத்தி அமைச்சருக்கு பாடம் புகட்டும் ரிஸ்க்கான வேலையில் இறங்குகிறார்.

சிறு கட்டெறும்பான அவர் மதயானையான அமைச்சரின் காதுக்குள் புகுந்து குடைச்சல் கொடுத்தாரா..? இல்லை அவரது காலில் மிதிபட்டு நசுங்கினாரா..? இதுதான் மீதிப்படம்..

இயக்குனர் ஆர்.கண்ணன் இதுவரை தான் இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு டெக்னாலஜி பின்னணியில் கதையை அமைத்ததற்கு முதலில் பாராட்டுக்களை சொல்லிவிடுவோம்.. இந்த கதையின் நாயகன் கேரக்டரில் கூடக்குறைய என இல்லாமல் மிகச்சரியாக பிட் ஆகியிருக்கிறார் கவுதம் கார்த்திக்.. கவுதமின் திரையுலக பயணத்தில் அவருக்கு இதுதான் அழுத்தமான முதல் வெற்றிப்படம்.

நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள புது வரவு.. வரும் காட்சிகளில் எல்லாம் செமையாக ஸ்கோர் செய்கிறார். கவுதமுடன் சண்டை போடுவது, பின்னர் நட்பாகி, காதலாவது என்கிற நிலைகளை படிப்படியாக பிரதிபலித்திருக்கிறார்.

சீரியஸாக, விறுவிறுப்பாக செல்லும் கதையில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் நமை கலகலப்பாக்குகிறது ஆர்ஜே பாலாஜியின் ஒன்லைனர் காமெடி. அதிலும் ஆட்டோகாரர்களை கலாய்க்கும் காட்சியில் செம கிளாப்ஸ். மீண்டும் ஒரு மிரட்டல் வில்லனாக சூப்பர் சுப்பராயன்.. மிகச்சரியான தேர்வு. அவரது மச்சானாக ஸ்டண்ட் சில்வா.. பணம் தராமல் கவுதமை சீண்டுவதும் கவுதமை வேவுபார்க்க வந்து பரிதாப முடிவை தேடிக்கொண்டு உண்மையை சொல்லாமல் உயிரை விடும்போது ‘கெத்து’ காட்டியுள்ளார்.

பாதிக்கு மேல் என்ட்ரியானாலும் பவ்யமான நடிப்பால் பவிசு காட்டியுள்ளார் மெட்ராஸ் ஜானி. எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தை கையாண்டு கவுதம் மந்திரிக்கு ஆப்பு வைப்பதும், அதே தொழில்நுட்பத்தை வைத்து மந்திரி தரப்பு கவுதமை நெருங்குவதும் செம விறுவிறுப்பு. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. எஸ்.தமனின் இனிய பாடல்களுக்கான இசையும், அதை மிஞ்சும் பின்னணி இசையும் அழகு. இதில் பாடல்களை அளவோடு நிறுத்தி, காதல் காட்சிகளை சிம்பிளாக அதேசமயம் நீட்டாகவும் சொல்லி, படத்தின் விறுவிறுப்புக்கு தடைபோடாமல் விட்டதற்கு இயக்குனர் கண்ணனுக்கு இன்னொரு நன்றி..

இதுநாள் வரை ஆர்.கண்ணன் இயக்கிய படங்களை பார்த்தவர்களுக்கு இது அவர் படம் தனா என்கிற சந்தேகம் ஏற்படவே செய்யும்.. அந்தவிதமாக புதியபாதையில் அடியெடுத்து வைத்துள்ளார் இயக்குனர் கண்ணன்.