K 13- விமர்சனம்


சினிமாவில் உதவி இயக்குனராக படம் இயக்க வாய்ப்புத்தேடி வருபவர் அருள்நிதி.. கதை எழுதும் நாவலாசிரியர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர்கள் இருவரும் ஒருநாள் இரவு பார் ஒன்றில் அறிமுகமாகிறார்கள். மறுநாள் காலை கண் விழித்து பார்த்தால் அருள்நிதி ஷ்ரத்தா ஸ்ரீநாத் வீட்டில் தனது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை உணர்கிறார்.

எதிரில் பிணமாக கிடக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதற்கிடையே ஷ்ரத்தாவுக்கு என்ன ஆயிற்று என விசாரிக்க போலீஸ் அவர் வீடு தேடி வருகிறது. பூட்டிய வீட்டிற்குள் இருக்கும் அருள்நிதி எதனால் இந்த நிலைக்கு ஆளானார்..? அதை கண்டுபிடித்தாரா..? அங்கிருக்கும் போலீசிடம் இருந்து அவர் தப்பித்தாரா..? அந்த இரவில் அப்படி என்ன நடந்தது என இதற்கெல்லாம் விடை சொல்கிறது மீதிக்கதை.

ஒரு அபார்ட்மெண்டில் இருக்கும் K 13 இருக்கிற என்கிற பிளாட்டில் நடக்கும் கதை என்பதால் அதையே தலைப்பாக வைத்துள்ளனர். அருள்நிதிக்கு உதவி இயக்குனர் வேடம் என்பது ஏக பொருத்தம்.. அதைவிட அவர் குடித்துவிட்டு மிக நிதானமாக பேசுகிறாரே அந்த வசன உச்சரிப்பு ஹாலிவுட் தரத்தில் மிக அழகாக இருக்கிறது. அலட்டிக்கொள்ளாத நடிப்பும் சேர்ந்து அவரது கதாபாத்திரத்தை அழகாக மாற்றி இருக்கிறது.

படம் முழுதும் பாதி நேரம் சடலமாகவும் மீதி நேரம் தனது வித்தியாசமான சிந்தனைகளால் நம்மை சற்றே குழப்பியும் சற்றே திகைக்கவும் வைக்கும் கதாபாத்திரம் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு அதை மிகச் சரியாக செய்திருக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் காயத்ரியின் கதாபாத்திரம் இன்று நல்லது என நினைத்துக்கொண்டு தங்களை அறியாமல் தவறு செய்யும் ஒரு சில பெண்களின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது.

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் யோகிபாபு நூறு வாலா சரவெடியாக வெடித்துவிட்டு செல்கிறார். இவர்கள் தவிர போலீஸ் அதிகாரிகள் அருல்நிதியின் நண்பர்கள் என ஆங்காங்கே உப கதாபாத்திரங்கள் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

போலீஸ் அந்த வீட்டிற்குள் நுழைய முடியாமல் தாமதம் காட்டுவது, ஷ்ரத்தாவுக்கு வந்த கிப்ட்டை அவசர அவசரமாக எதிர்வீட்டு இளைஞன் வாங்குவது, தப்பிப்பதற்காக மொட்டை மாடிக்கு ரிஸ்க் எடுத்து செல்லும் அருள்நிதி மீண்டு அதே வீட்டிற்குள் வருவது ஏன் என சில கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் வைத்து கதையை முடித்திருக்கிறார் இயக்குனர் பரத் நீலகண்டன். ஆனால் அது சராசரி ரசிகர்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ஒரே அறையில் நடப்பதாக இந்த முதல் பாதி சற்று மெதுவாக நகருவது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. அதை ஈடுகட்டும் விதமாக இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது த்ரில்லர் பிரியர்களுக்கு இந்த படம் திருப்தியை தரும்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *