காற்றின் மொழி – விமர்சனம்


கணவர் விதார்த், பத்து வயது மகன்னு அழகான குடும்பத்தை நிர்வகிக்கிற ஜோதிகாவுக்கும் ஏதாவது வேலைக்கு போகணும், சொந்தமா பிசினஸ் பண்ணனும்னு ஆசை. ஆனா அவங்க பிளஸ் டூ வரைக்கும் படிச்சவங்கன்னு சொல்லி அவங்க அப்பாவும், பேங்க்ல வேலை பார்க்கிற ஜோதிகாவோட டிவின்ஸ் அக்காக்களுமே அவரை மட்டம் தட்டி பேசுறாங்க.. இந்த சமயத்துல ஒரு எப்.எம்.ரேடியோவுல ஜோதிகாவோட பேச்சு திறமையை பார்த்து ரேடியோ ஜாக்கியா வேலை கிடைக்குது.

எப்.எம். சி.ஈ.ஒ லட்சுமி மஞ்சு ஜோதிகாவை நம்பி ‘மதுவோடு பேசுங்கள்’னு ஒரு நிகழ்ச்சியை ஒப்படைக்கிறார். அதாவது இந்த நிகழ்ச்சியை நடத்துற ஜோதிகாவுக்கு மது’ன்னு ஒரு புனைப்பெயர் வச்சு அந்தப்பேர்ல நிகழ்ச்சி நடத்துறாங்க.. ஆனா நிகழ்ச்சி நடக்குறது தினம் நைட் 1௦ மணிக்கு மேல.. வீடு திரும்புறதுக்கு லேட் நைட் ஆகியிரும்.

ஆரம்பத்தில் விதார்த்தும் சந்தோஷமாத்தான் அனுப்பி வைக்கிறாரு.. ஆனா போகப்போக ஜோதிகா இப்படி லேட் நைட்ல வேலைக்கு போயிட்டு வர்றது ஒரு பக்கமும் அவர் மத்த ஆண்களோட பேசுறது ஒரு பக்கமும்னு நாளுக்கு நாள் இவங்க குடும்பத்துல ஒரு புது சிக்கலை உண்டாக்குது.. இதனால் நிகழ்ச்சி ஆரம்பிச்ச ஒரு மாசத்துல சூப்பர் ஹிட்டா ஆனாலும் ஜோதிகா அந்த வேலையை விடவேண்டிய நிர்ப்பந்தம் தானா உருவாகிறது. ஜோதிகா வேலையை விட்டுட்டாரா.. இல்ல அவரோட பிடிவாதத்தால் குடும்ப வாழ்க்கை குலைஞ்சு போச்சா அப்படிங்கிறது மீதிக்கதை..

இதுக்கு முன்னாடி ’36 வயதினிலே’, மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம்’னு ஜோதிகா ரீ என்ட்ரி ஆகியிருந்தாலும், நாம தொண்ணூறுகள்ல பார்த்து ரசிச்ச அந்த துறுதுறு ஜோதிகாவை இந்தப்படத்துல தான் மீண்டும் முழுசா பார்க்க முடியுது. வேலைக்கு போகணும்கிற அவங்களோட ஏக்கத்தை அந்த கண்கள்லேயே என்ன அழகா வெளிப்படுத்துறாங்க தெரியுமா..?

அதிலும் அந்த நிகழ்ச்சியை அவங்க நடத்துற விதம் இருக்கே.. சான்சே இல்ல.. கூடவே வசனகர்த்தா சப்போர்ட்டும் இருக்கிறதால சும்மா பிரிச்சி மேஞ்சிருக்காங்க.. ஆனா கடைசி இருபது நிமிஷம் உங்கள அப்படியே கண் கலங்க வச்சிருவாங்க…

ஜோதிகாவை பூஸ்ட் அப் பண்றதுக்காக விதார்த்தை டம்மி ஆக்கிருப்பாங்களேன்னு நினைச்சா.. இதுல ஜோதிகா அளவுக்கு விதார்த்துக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க.. அவரும் அதுக்கேத்த மாதிரி தன்னோட கோபம் ஆசை, ரொமான்ஸ், விரக்தின்னு கலந்துகட்டி வெளிப்படுத்தியிருக்கார். குறிப்பா வேலைக்கு போயிட்டு வந்ததும் தனக்கு மனைவியோட கிடைக்கிற அந்த அன்பான நேரம் மிஸ்ஸாகிறதை அவர் வெளிப்படுத்துவார் பாருங்க.. அது ஒவ்வொரு சராசரி கணவனோட உணர்வாத்தான் நமக்கு தெரியுது. அப்புறம் சிம்புகூட ஒரு சீன்ல கெஸ்ட் ரோல்ல வந்துட்டு போறாரு.. அஞ்சு நிமிஷம்னாலும் அதுலயும் அவரோட டச்சிங்கை காட்டிட்டு போறாரு மனுஷன்.

ராதாமோகன் படம்னாலே அவரோட ரெகுலர் ஆட்களும் இருப்பாங்க தானே…? அந்தவகையில் ஒவ்வொருத்தருக்கும் சும்மா ‘நச்’சுன்னு கேரக்டரும் அதுக்கேத்த மாதிரி காட்சிகளையும் கொடுத்திருக்கார். எந்நேரமும் கடுகடுன்னு வர்ற எம்.எஸ்.பாஸ்கர் ஒருகட்டத்துல நம்மை அப்படியே உருகி அழ வச்சிடுறாரு. என்ன மாதிரி நடிகன்யா அவரு..?

அதேமாதிரி டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஓனரா வர்ற மயில்சாமியும் அவரோட துடைப்பக்கட்ட காமெடியும் சிரிச்சு சிரிச்சு வயித்துவலியே வந்துரும். ஆனா மனோபாலா காமெடி சிரிக்க வசாலும், அவரு வர வர இன்னொரு வெண்ணிற ஆடை மூர்த்தியா மாறிக்கிட்டே வர்றாரு.. பாத்து செய்யுங்கப்பா..

அப்புறமா நம்ம குமரவேலு.. எப்.எம்ல முக்கியமான போஸ்டிங்ல உக்கார்ந்துட்டு அதுல தன்னோட வேலையை ரொம்ப அழகா செஞ்சிருக்கார். ‘டாடி டவுட்டு’ சரவணன் ரெண்டு சீன்ல வந்தாலும் ஸ்கோர் பண்ணிடுறார்.

தெலுங்குல நடிகர் மோகன்பாபுவோட மகள் லட்சுமி மஞ்சு எப்.எம். சி.ஈ.ஒவா வர்றாரு.. அசப்புல ஸ்ருதிஹாசன் மாதிரியே இருக்கிறாரு அந்த கேரக்டர்ல அவரை தவிர வேற யாரையும் நினைச்சு பார்க்க முடியல.. கதாநாயகியா மாத்துறேன்னு இனி வர்றவங்க அவரை வீனடிச்சிடாம, நல்ல கெத்தான கேரக்டர்களா கொடுத்தா தமிழ் சினிமாவுல ஒரு ரவுண்டு வருவாரு.

ஜோதிகாவோட அக்காக்களா வர்ற அந்த இரட்டை சகோதரிகள் பத்தி சொல்லியே ஆகணும். செம க்யூட்டா இருக்காங்க ரெண்டு பேருமே. ஆனா அவங்க ரெண்டு பேரும் மட்டுமல்லாம, அவங்க அப்பா மோகன்ராமும் கூடவே சேர்ந்துக்கிட்டு ஜோதிகாவ மட்டம் தட்டுறது கொஞ்சம் ஓவர்னாலும், பல வீடுகள்ல இது நடக்கத்தான் செய்யுது.

ராதாமோகன் படம்னா குடும்பத்தோட பார்க்கலாம்கிற உத்தரவாதம் எப்பவுமே இருக்கும். இந்தப்படத்துல மட்டும் அதை மீறிடுவாரா என்ன..? மியூசிக் டைரக்டர் ஏ..ஹெச்.காஷிப் புதியவர்னாலும் பின்னணி இசையில அழகா படத்தை நகர்த்தி இருக்கார். மனிதர்களுக்கு என்னனென்ன மாதிரியெல்லாம் உளவியல் பிரச்சனை இருக்கு அப்படிங்கிறத ஜோதிகா நடத்துற அந்த எப் எம் நிகழ்ச்சில நாம கேட்குறப்ப இப்படில்லாம் கூட பிரச்சனைகள் இருக்கான்னு ஆச்சர்யம் தான் வருது. அதேசமயம் ஜோதிகா அதுக்க அவ்வளவு அழகா தெளிவா தீர்வு சொல்ற விதமும் செம.

கணவன் மனைவி வேலைக்கு போகிறதால கணவனுக்கு, குழந்தைகளுக்கு ஏற்படுற சிக்கல்களையும் நியாயமா அலசியிருக்கார் இயக்குனர் ராதாமோகன். அதேசமயம் மாத்தி யோசிச்சா நல்ல தீர்வும் கிடைக்கும் பெண்கள் தங்களோட கனவுகளையும் விட்டுக்கொடுக்க தேவையில்லைங்கிறதையும் அழுத்தமா சொல்லியிருக்கார் ராதாமோகன்.