கனா – விமர்சனம்


கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி ஏற்கனவே சில படங்கள் வந்துள்ள நிலையில் இந்த கனாவும் கிரிக்கெட்டை மையமாக வைத்துதான் வெளிவந்துள்ளது ஆனால் அதனுடன் விவசாய பிரச்சனையும் சேர்த்து சொன்ன விதத்தில்தான் இந்த படம் வித்தியாசப்பட்டு நிற்கிறது

விவசாயி சத்யராஜுக்கு விவசாயம் ஒருபக்கம் உயிர் என்றால் கிரிக்கெட் இன்னொரு பக்கம் உயிர் உலக கோப்பையில் இந்தியா தோற்று விட்டதே என கண்ணீர் விடும் சத்யராஜை பார்த்து, எப்படியாவது இந்தியாவிற்காக விளையாடி வெற்றிபெறச் செய்து தனது தந்தையின் முகத்தில் சந்தோஷத்தை கொண்டு வர நினைக்கிறார் அவரது மகள் சிறுமி ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதன்பின் அவர் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடுவது, அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சந்தித்து தான் கண்ட கனவை விடாப்பிடியாக நின்று சாதித்து, தனது தந்தையின் முகத்தில் எப்படி மகிழ்ச்சியை கொண்டு வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை

இந்த கதையின் ஊடாக படம் நெடுகிலும் ஆங்காங்கே ஒரு விவசாயியின் அடிப்படை பிரச்சினைகளை அழுத்தமாக கூறி இந்த ‘கனா’ ஒவ்வொரு ரசிகரும் மட்டுமல்ல விவசாயத்தை நேசிக்கும் அல்லது விவசாயத்தை பற்றி தெரிந்து கொள்ள மறுக்கும் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்பதை நிரூபிக்கிறது

கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தான் எவ்வளவு நேர்த்தி கிராமத்திலிருந்து கிரிக்கெட் விளையாட வரும் ஒரு சாதாரண பெண்ணின் தோற்றத்தை அப்படியே அச்சு அசலாக பிரதிபலித்திருக்கிறார் ஐஸ்வர்யா. சிறுவயது குறும்புத்தனம் வயத்துக்கு வந்தபின்னும் பையன்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது, பின் நாட்டிற்காக விளையாட ஒவ்வொரு படியாக தயாராவது என ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான நடிப்பை வெளிப்படுத்தி சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக கௌசல்யா என்கிற அந்த கேரக்டரை தனது நடிப்பால் செம்மைப்படுத்தி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்

கதையை தாங்கி பிடிக்கவும் முக்கியத் தூணாக வருகிறார் சத்யராஜ் கிரிக்கெட்டையும் விவசாயத்தையும் இரு கண்களாக நேசிப்பதும் மகளுக்காக எதையும் விட்டுக் கொடுப்பதும் ஆனால் விவசாயத்திற்காக எதையும் விட்டுக் கொடுக்க மறுப்பதும் என ஒரு கெத்தான விவசாயி ஆக படம் முழுக்க வருகிறார் சத்யராஜ் தற்போதைய சூழலுக்கு தேவையான வசனங்களை சாட்டையடியாக அவ்வப்போது விளாசித்தள்ளி கைதட்டலையும் அள்ளுகிறார் மனிதர்

படத்தின் கதாநாயகனாக வரும் தர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷின் முயற்சிக்கு அவர் அறியாமலேயே பக்கபலமாக இருப்பதும் படத்தின் ஒரு முக்கியமான காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்லும் அந்த ஒற்றை வார்த்தையால் பியூஸ் போன பல்ப்பாக மாறுவதும் என காமெடி கலகலப்பு காட்டியுள்ளார்

சத்யராஜின் நண்பராக வரும் இளவரசு, ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவாக வரும் ரமா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கிரிக்கெட் விளையாடும் கவுசி பாய்ஸ் அதைத் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட தயாராகும் மற்ற பல வீராங்கனைகளாக நடித்திருப்பவர்கள், அவ்வளவு ஏன் சிறுவயது ஐஸ்வர்யாக நடித்துள்ள அந்த சுட்டிப்பெண் என அனைவருமே இந்த படத்தின் முக்கியத்துவம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக கடைசி அரை மணி நேரம் வந்தாலும் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம், ஒருவர் தங்களுக்குள் ஒளிந்துகிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவர ஒரு உந்துதல் அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.. மிகவும் மெச்சூரிட்டியான அந்த கேரக்டரை ஜஸ்ட் லைக் தட் அழகாக செய்துவிட்டு போகிறார் சிவகார்த்திகேயன்.

இயக்குனர் அருண் ராஜா காமராஜூக்கு இணையான வேகம் காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் குறிப்பாக உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஸ்டேடியம் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரொம்பவே யதார்த்தமாக அவர் படமாகியுள்ளது பிரமிக்க வைக்கிறது இசையமைப்பாளர் தினமும் திபு நிணனும் தன் பங்கிற்கு பின்னணி இசையில் காட்சிகளை பரபரக்க வைக்கிறார்

கிரிக்கெட்டில் அதுவும் பெண்கள் கிரிக்கெட்டில் கூட எப்படியெல்லாம் பாலிடிக்ஸ் நடக்கிறது என்பதை போகிற போக்கில் புட்டு புட்டு வைக்கவும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தவறவில்லை இறுதியாக விவசாயத்தை பற்றி பேசுவதற்கு தனக்கு கிடைத்த மேடையை ஐஸ்வர்யா ராஜேஷ் பயன்படுத்தும் விதமாக கிளைமாக்சை வடிவமைத்த விதத்தில் தான் ஒரு இயக்குனராக அருண்ராஜா காமராஜ் வெற்றிக்கோட்டை மிக அழகாக தாண்டியுள்ளார்