மேயாத மான் – விமர்சனம்


குறும்படம் மூலம் புகழ்பெற்ற ரத்னகுமார் என்கிற இயக்குனரின் கைவண்ணத்தில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘மேயாத மான்’.. மேயாத மான் என்கிற இசைக்குழுவை நடத்தி வருபவர் வைபவ்.. தனது கல்லூரி தோழியான பிரியா பவானி சங்கரை அவர் மூன்று வருடங்களாக இதயம் முரளி போல ஒருதலையாக காதலித்து வருகிறார்..

இந்தநிலையில் பிரியாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயமாக, இதை அறிந்து தற்கொலைக்கு முயல்கிறார் வைபவ். ஆனால் வைபவின் நண்பர்கள், ப்ரியா மூலமாக ஒரு ட்விஸ்ட் வைத்து வைபவிடம் பேசவைத்து அவரை காப்பாற்றுகின்றனர். ஆனால் பிரியாவை கெட்ட பெண் போல நண்பர்கள் சித்தரித்ததால், அதன்பிறகு பிரியாவை பார்க்கும்போதெல்லாம் பாம்பை கண்ட கீரியைப்போல சீறுகிறார் வைபவ்.

இந்த மோதலே ஒரு கட்டத்தில் வைபவின் மேல் பிரியாவுக்கு காதலை ஏற்படுத்துகிறது.. ஆனால் இன்னொருவருக்கு நிச்சயித்த பிரியா வைபவுடன் சுற்றுவதை அவரது பெற்றோர் எதிர்க்கின்றனர்.. தங்களது காதலை பிரித்துவிடாமல் இருக்க, வைபவுடன் படுக்கையையும் பகிர்கிறார் ப்ரியா.

இதன்பின் நடக்கும் நிகழ்வுகள் பிரியாவையும் வைபவையும் ஒன்று சேர்க்கிறதா..? இல்லை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் பிரியாவின் திருமணம் நடந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

படம் முழுதும் தாடிவைத்த தேவதாஸ் போல அந்த இதயம் முரளி கேரக்டரில் செமையாக பொருந்துகிறார் வைபவ்.. ஆனால் அவரது கேரக்டர் தான் பலவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு த்ரிஷா கிடைத்துவிட்டார் என்று சொல்லும் விதமாக புதுமுகமாக அறிமுகமாகியுள்ள பிரியா பவானி சங்கர் தனது அழகாலும் நடிப்பாலும் ஈர்க்கிறார்.

அலட்டிக் கொள்ளாத உடல் மொழி, மிக இயல்பாக வெளிப்படுத்தும் வசனங்கள், யதார்த்தமான முக பாவனைகள் என வைப்பவை ஓவர்டேக் செய்கிறார் அவரது நண்பராக வரும் விவேக் பிரசன்னா. வைபவின் தங்கையாக வரும் இந்துஜாவும், அவரை தங்கையாக நினைத்து, பின் அவர் தன்னை காதலிப்பதை உணர்ந்து அவரிடம் காதலை சொல்லும் இடமும் நல்ல ரசனை. சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் இசையமைப்பில் பாடல்களும். ஓரளவு இனிமை சேர்க்கின்றன.

பல காட்சிகளில் வழக்கமான முறைகளை உடைத்த விதமும் திரையில் கொடுத்த விதமும் கவர்கிறது. அந்தவகையில் முதல் பாதியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குனர் ரத்னகுமார், இரண்டாம் பாதியில் பொங்கிய பாலில் தண்ணீரை தெளித்தது போல சப்பென்று ஆக்கிவிடுகிறார். விது ஐயன்னாவின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப் பெரிய பலம்.

திருமணம் நிச்சயமான பெண் எதற்காக முன்பு வெறுத்த ஹீரோவையே காதலிக்கிறாள் என்பதற்கு வழக்கம்போல இந்தப்படத்திலும் எந்த லாஜிக்கும் இல்லை. பின் அவர்கள் பிரிவதற்காக சொல்லப்படும் காரணமும் ஏற்புடையதாக இல்லை. அதேசமயம் வழக்கமான காதல் தோல்வி, காதலுக்கு உதவும் நண்பர்கள் கதையை கொஞ்சம் வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.