நான் சிரித்தால் – விமர்சனம்


படத்தின் நாயகன் ஹிப்ஹாப் ஆதி ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால்அவருக்கு சோகம் ஏற்பட்டாலோ அல்லது பதற்றப் பட்டாலும் தாங்க முடியாமல் சிரித்து விடுவார்.

இம்மாதிரியான வித்தியாசமான அவரது செய்கையினால் அவர் தனது வேலையை இழந்து விடுகிறார். அது மட்டுமல்லாது அவரது காதலிலும் சிக்கல் ஏற்படுகிறது.

இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் காணாமல் போன தன் நண்பனை மற்ற நண்பர்களுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார் ஆதி.

இது ஒருபுறமிருக்க, பெரிய தாதாக்களான ரவி மரியாவும் கேஎஸ் ரவிக்குமாரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சி செய்கின்றனர். அப்போது கேஎஸ் ரவிக்குமார் கொல்ல ரவிமரியா 3 ரவுடிகளை அனுப்பி வைக்கிறார்.

காணாமல் போன தனது நண்பனைத் தேடி செல்லும் ஆதி எதிர்பாராதவிதமாக தாதாவான கே.எஸ். ரவிக்குமார் இடம் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் ஆதி அங்கிருந்து எப்படி தப்பித்தார்? அவரின் காதல் கைகூடியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் கெக்க பெக்க என்னும் ஒரு குறும் படத்தை தழுவி எடுக்கப்பட்ட முழு நீள திரைப்படம் ஆகும். படத்தின் நாயகன் ஆதி காதல் சென்டிமென்ட் மற்றும் நடனம் போன்றவற்றில் அசத்தி இருக்கிறார். வழக்கம்போல் தனது துருதுருவென்ற நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.

நாயகி ஐஸ்வர்யா மேனன் இயக்குனர் கொடுத்த வேலையை கனகச்சிதமாக செய்துள்ளார்.

ஆதியின் அப்பாவாக வரும் படவா கோபி டைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.

தங்களது அனுபவமான நடிப்பால் வில்லத்தனத்தில் மிரட்டுகின்றனர் கேஎஸ் ரவிக்குமாரும் ரவிமரியாவும்.

ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரேக்கப் மற்றும் நான் சிரித்தால் ஆகிய இரண்டு பாடல்களும் ரசிக்க வைக்கின்றது.

மொத்தத்தில் ‘நான் சிரித்தால்’ கொஞ்சம் விறுவிறுப்பு குறைவு.