நட்பே துணை – விமர்சனம்


முதன்முதலாக ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி வெளியாகியுள்ள படம் தான் இந்த ‘நட்பே துணை’. டான்ஸ் குரூப்பில் சேர்ந்து வெளிநாடு செல்ல பிடிக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. இதற்காக விசா எடுப்பதற்கு காரைக்காலில் உள்ள தனது மாமா பாண்டியராஜனின் வீட்டு விலாசத்தை கொடுத்துவிட்டு, அதன்பொருட்டு அங்கே சென்று 15 நாட்கள் தங்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்படுகிறது

போன இடத்தில் அந்த பகுதியில் ஹாக்கி விளையாடும் மைதானம் ஒன்று இருக்கிறது அங்கே அனகாவை பார்த்து காதலாகும் ஆதி, அவரது காதலை பெறுவதற்காக அந்த மைதானத்திற்கு அடிக்கடி செல்கிறார். அப்போதுதான் உள்ளூர் அரசியல்வாதி கரு.பழனியப்பனின் உதவியுடன் வெளிநாட்டு நிறுவனம் அந்த மைதானத்தை அழித்துவிட்டு, அந்த இடத்தில் தங்களது ஃபேக்டரியை கட்ட துடிக்கிறது
அதேசமயம் அங்குள்ள ஹாக்கி பயிற்சியாளர் ஹரிஷ் உத்தமன் மக்களை ஒன்று திரட்டி இந்த ஃபேக்டரி வரவிடாமல் எதிர்க்கிறார்..

இந்த சூழலில் அங்கே வெள்ளியார் காலத்தில் இருந்து நிலவும் சட்டப்படி உள்ளூர் ஹாக்கி அணி அதே பகுதியில் இருக்கும் ஃபிரஞ்ச் ஹாக்கி அணியுடன் மோதவேண்டும். யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இந்தத்திட்டம் கைவிடப்படும். அதனால் இதற்கான ஏற்பாடுகளை ஹரிஷ் உத்தமன் செய்யும்போது ஒரு தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் உள்ளூர் அணியில் இருக்க வேண்டும் என்கிற சிக்கல் ஏற்படுகிறது.

இந்த சூழலில்தான் ஹிப் ஹாப் ஆதி ஒரு சர்வதேச அளவிலான ஹாக்கி விளையாட்டு வீரர் என்பதும் கடந்த சில வருடங்களாகவே அவர் ஹாக்கியை விட்டு ஒதுங்கி இருப்பதும் தெரியவருகிறது.. அவர் எதற்காக ஹாக்கியை விட்டு ஒதுங்கினார்..? இந்த ஹாக்கி மைதானத்தை காப்பாற்றுவதற்காக மீண்டும் ஹாக்கி மட்டையை கையில் பிடித்தாரா..? அதனால் பலன் கிடைத்ததா என்பது மீதிக்கதை.

இடைவேளை வரை டான்ஸ், பாட்டு, காதல் என ஹீரோக்கள் செய்யும் வழக்கமான வேலைகளை ஹிப் ஹாப் ஆதியும் செய்கிறார். இடைவேளைக்கு பின்பு குறிப்பாக கிளைமாக்ஸில் அந்த 20 நிமிடம் கோட்டை விட்டதை எல்லாம் ஸ்கோர் செய்து விடுகிறார் ஆதி.

கதைக்கும் ஹீரோவுக்கும் ஒரு கதாநாயகி வேண்டும் என்பது போல அந்தத் தேவையை பூர்த்தி செய்திருக்கிறார் நாயகி அனகா. இந்த படத்தில் ஒரு அரசியல்வாதி கேரக்டர் மூலம் வில்லன் நடிகராக மாறியிருக்கிறார் கரு.பழனியப்பன். ஓரளவு தனது பங்களிப்பை கொடுத்திருந்தாலும் வசனம் ஒத்துழைப்பது போல உடல் மொழியையும் வசப்படுத்திக் கொண்டால் நமக்கு இன்னும் ஒரு குணச்சித்திர நடிகர் நிரந்தரமாக கிடைப்பார் என்பது உறுதி.

தொடர்ந்து வில்லனாகவே பார்த்து வந்த ஹரிஷ் உத்தமன் மக்களுக்காக போராடும் ஹாக்கி பயிற்சியாளராக புதிய முகம் காட்டி இருக்கிறார். சபாஷ்.. பாண்டியராஜன், கௌசல்யா சில சீனியர்கள் இருந்தாலும், ஏதோ கடமைக்கு வந்துபோகும் மனிதர்கள் போல நடித்தது சற்று ஏமாற்றம் தான்.

யூட்யூப் பிரபலங்களான விக்னேஷ் காந்த், ஷாரா, சுட்டி அரவிந்த், பிஜிலி ரமேஷ் எருமசாணி விஜய் என ஒவ்வொருவரும் தங்களது இருப்பை ரசிகர்கள் மனதில் பதிய வைக்க முயற்சித்திருக்கிறார்கள். வில்லத்தனம் கலந்த எதிர்த்தரப்பு பயிற்சியாளராக குமரவேல் வழக்கம்போல சிறப்பான நடிப்பு.

ஹிப் ஹாப் ஆதி அவருக்கு தேவைக்கேற்றபடி காதல், உத்வேகம், நட்பு என ஏரியா வாரியாக பாடல்களைப் போட்டிருக்கிறார். பாண்டிச்சேரியில் இதுவரை நாம் பார்த்திராத ஒரு உலகத்தை தங்கள் ஒளிப்பதிவின் மூலம் காட்டியுள்ளார் அரவிந்த் சிங்.

இடைவேளை வரை படத்தை வெறுமனே ஒரு சாதாரண பொழுதுபோக்கு படம் போல நகர்த்தியிருப்பது அலுப்பு.. இருந்தாலும் இடைவேளைக்கு பின்பு ஒரு முக்கியமான நோக்கத்திற்காக ஹாக்கி விளையாட்டு போட்டியை மையப்படுத்தி அதேசமயம் அந்த அரை மணி நேரத்தை மிக விறுவிறுப்பாக கொண்டு சென்றதற்காக இயக்குனர் பார்த்திபன் தேசிங்குவை பாராட்டலாம்