பறந்து செல்ல வா – விமர்சனம்


பார்க்கும் பெண்ணை எல்லாம் இவள் நமக்கு காதலியாக வரமாட்டாளா என நினைத்து ஏங்கும் விடலை இளைஞன் தான் லுத்புதீன். சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கும் அவருக்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சிங்கப்பூரில் நண்பன் சதீஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் ஜோ மல்லூரி மற்றும் இரு பெண்கள் கூட்டாக தங்கி இருக்கும் வீட்டில் தங்கி வேலைக்கு செல்கிறார்.

நண்பர்கள் அவரது காதல் ஆசையை அடிக்கடி கிண்டல் பண்ணுகிறார்கள்.. அவர்கள் வாயை அடைப்பதற்காக, ஆபீஸ் நண்பன் ஆர்ஜே.பாலாஜி உதவியுடன் தனக்கு ஒரு காதலி பேஸ்புக் மூலம் கிடைத்திருப்பதாக செட்டப் செய்து பிலிம் காட்டுகிறார் லுத்புதீன்.. இதற்காக யாரென்றே தெரியாத சீனப்பெண்ணான நரேல் கேங்கின் போட்டோவை பேஸ்புக்கில் பயன்படுத்துகிறார்.

இந்நிலையில் ஊரில் அம்மா அப்பா அவரது திருமணத்துக்காக பார்த்துள்ள பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ் சிங்கப்பூரில் படிப்பதாக கூற, அவரைப்போய் நேரில் பார்த்ததுமே காதலாகிறார் லுத்புதீன்.. இப்போது பேஸ்புக்கில் இவர் தனது காதலியாக சித்தரித்திருந்த சீனப்பெண்ணுக்கு அந்த விபரம் தெரியவர, ஆரம்பத்தில் கோபப்பட்டாலும், லுத்புதீனின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்டு அவர் மீது காதலாகிறார்.

ஒரு கட்டத்தில் நண்பர்கள் மட்டும் அல்லாது ஐஸ்வர்யாவுக்கும் லுத்புதீனின் இந்த ஏமாற்று வேலை தெரிய வருகிறது.. இன்னொரு பக்கம் சீனப்பெண்ணும் தன்னை திருமணம் செய்யும்படி லுத்புதீனை வற்புறுத்துகிறார். முன்பு காதலி கிடைக்க மாட்டாளா என ஏங்கிய லுத்புதீன் இப்போது இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறார். அவர் யாரை கரம்பிடித்தார் என்பது க்ளைமாக்ஸ்..

பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்க நினைக்கும் துறுதுறு விடலைப்பையனாக நடித்துள்ள லுத்புதீன் அந்த கேரக்டருக்கு மிகச்சரியான தேர்வு.. டீனேஜ் பையன்களுக்கே இயல்பாக எழும் காதல் ஆசையை அடக்கமுடியாமல் அவர் ஒவ்வொருவரிடமும் வெளிப்படுத்தும் விதம் ரசிக்க வைக்கிறது.

முற்போக்கு சிந்தனைவாதியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் நமக்கு ஏற்கனவே பார்த்து பழக்கமானது என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். தமிழ் வம்சாவளியை சேர்ந்த சீனப்பெண்ணாக வரும் நரேல் கேங், லுத்புதீனை உருகி உருகி காதலிக்கும் விதத்திலும் தனது காதல் சோகம் மற்றும் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் உணர்வுகளில் விதவிதமான முகபாவங்களிலும் அசத்துகிறார்.

படபட பட்டாசாக வரும் ஆர்.ஜே.பாலாஜி தனது பங்கிற்கு வழக்கம்போல கலாய்க்கும் வேலைகளை சரியாக செய்திருக்கிறார்.. யூடியூப், பேஸ்புக் எண்ணிக்கை சாதனைகளின் பின்னணியை அவர் உடைக்கும் இடத்தில் தியேட்டர் குலுங்குகிறது. சதீஷ் வழக்கம்போல கவுண்டர் டயலாக் பேச முயற்சித்திருக்கிறார்.. ஆனால் நிறைய இடங்களில் நமக்கு கடுப்புதான் வருகிறது., அவரது காதலியாக வரும் சுகன்யா மற்றும் ஆனந்தி கதாபாத்திரங்களும் அவர்கள் பழகும் விதமும் படு யதார்த்தம்.. ஜோ மல்லூரிக்கு சிம்பிளான ரோல். கருணாகரன் அன் கோ சீரியலுக்கு கதை பிடிப்பதாக சொல்லி பொன்னம்பலத்திடம் படும் அவஸ்தைகள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

ஜாலியாக ஒரு காதல் படத்தை எடுக்க நினைத்து அதற்கு சிங்கப்பூரை கதைக்களமாக தேர்ந்தெடுத்த இயக்குனர் தனபால் பத்மநாபனை பாராட்டியே ஆகவேண்டும்.. காரணம் கதையுடன் சேர்த்து சிங்கப்பூர் முழுவதும் நம்மையும் கூடவே கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைத்து, நாமும் சிங்கப்பூர் டூர் போய்வந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளார்.. அவரது இந்த முயற்சிக்கு சந்தோஷ் விஜயகுமாரின் திறமையான நேர்த்தியான ஒளிப்பதிவு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. ஜோஷுவா ஸ்ரீதரின் இசையில் ஏழு பாடல்களில் மூன்று ரசிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் ஜாலியாக பார்த்து மகிழ ஒரு பொழுதுபோக்கான படம் என்கிற நிறைவை தருகிறது இந்த ‘பறந்து செல்ல வா’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *