புரியாத புதிர் – விமர்சனம்


மியூசிக் டைரக்டராக விரும்பும் விஜய்சேதுபதி தற்காலிகமாக இசைக்கருவிகள் விற்பனை கடையில் வேலைபார்க்கிறார். ஒருமுறை காயத்ரியை பார்த்ததும் காதல் வர தமிழ்சினிமா இலக்கணப்படி இருவரும் காதலர் ஆகின்றனர்.. இந்தநிலையில் விஜய்சேதுபதியின் நண்பர்களில் ஒருவர் அவருடைய கள்ளக்காதல் வெளியான அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார். இன்னொரு நண்பரான அர்ஜுனனும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதாகிறார்.

காயத்ரியின் உடைமாற்றும் ஆபாச காட்சி ஒன்று விஜய்சேதுபதியின் செல்போனுக்கு வருகிறது. இன்னொருமுறை விஜய்சேதுபதியும் காயத்ரியும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றும் விஜய்சேதுபதியின் மொபைலுக்கு வருகிறது..

இதையெல்லாம் செய்வது யார்.. விஜய்சேதுபதியையும் அவரது நண்பர்களையும் குறிவைத்து இப்படி தொடர்ந்து நடக்க காரணம் என்ன..? இதில் காயத்ரி எப்படி உள்ளே வந்தார்…? என பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸ் அதிர்ச்சியாக விடை சொல்கிறது.

இன்று விளையாட்டாக செல்போனில் அந்தரங்கத்தை படம்பிடிப்பது ஒரு பேஷனாகிவிட்டது. அதன் உள்ளே ஒளிந்திருக்கும் விபரீதம் புரியாமல் அப்படி செய்வது எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என த்ரில்லர் பாணியில் கருத்து சொல்லியிருக்கிறார்கள். விஜய்சேதுபதியின் நடிப்பை பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன..? காயத்ரியின் வீடியோ அவரது போனுக்கு வந்ததில் இருந்து அவர் டென்சனுடன் உணர்வுகளை வெளிக்கடுவதில் மிரட்டுகிறார்.

காயத்ரிக்கு நடிக்க வாய்ப்புள்ள நிறைய காட்சிகள்.. அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். க்ளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு கதைப்படி நியாயம் தான். மஹிமாவின் பிளாஸ்பேக் காட்சி நம்மை ‘உச்’ கொட்டுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் நம்மிடம் உள்ள சில வக்கிரங்களை களையெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் பொட்டில் அறைந்தாற்போல உணர்த்துகிறது. அடுத்ததடுத்த த்ரில்லிங் காட்சிகளால் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி