ரூபாய் – விமர்சனம்


தேனியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வாடகைக்கு லாரி ஓட்டி வரும் ‘கயல்’ சந்திரனும் அவரது நண்பர் கிஷோரும், ஊருக்கு திரும்புவதற்குள் சென்னை சிட்டிக்குள் உள் வாடகை கிடைக்காதா என தேடுகின்றனர்.. வீடு மாற்ற வண்டிதேடும் சின்னி ஜெயந்த்தின் வசம் சிக்குகின்றனர்.. லாரியில் சாமான்களை ஏற்றி சுற்றி அலைந்தும் சரியான வீடு கிடைத்த பாட்டை காணோம்.. இதில் சின்னியின் மகள் ‘கயல்’ ஆனந்தியின் மீது ஒரே நாளில் லவ்வாகிறார் சந்திரன்..

இந்தநிலையில் வங்கியில் புது ரூபாய் நோட்டுக்களை கொள்ளையடிக்கும் ஹரீஷ் உத்தமன் அதை, போலீஸ் சோதனைக்கு பயந்து சந்திரனின் லாரியில் போட்டு விடுகிறார்.. பின்னர் லாரியின் நம்பரை வைத்து அதை தேடுகிறார். அந்தப்பணம் சந்திரன் அன் கோவுக்கு சொந்தம் ஆனதா இல்லை ஹரீஷ் உத்தமனுக்கு சொந்தம் ஆனதா இல்லை அனைவருக்கும் தண்ணி காட்டியதா என்பது மீதிக்கதை..

லாரி கிளீனர் கம் ஒனராக வரும் சந்திரன் இன்னும் நடிப்பில் தரவேண்டிய நிலையில் தான் இருக்கிறார். தான் இக்கட்டான சூழலில் சிக்கியிருப்பது குறித்து அவரது கேரக்டர் பதறவே இல்லை என்பது அவர் நடிப்பில் குறையா இல்லை அவரது கதாபாத்திர வடிவமைப்பில் குறையா என்பது.. இயக்குனருக்கே வெளிச்சம்.

அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாத, அப்படி ஆசைப்படும் அப்பா சின்னி ஜெயந்த்தையும் அதட்டும் மகளாக ஆனந்தி சாதாரண மேக்க்ப்பிலேயே நம்மை ஈர்க்கிறார். சந்திரன் மீதான தன் காதலை வெளிப்படுத்தும் விதம் அழகு. ஆனால் க்ளைமாக்ஸில் அவரது முடிவு பரிதாபம் கொள்ளவைக்கிறது.

இன்னொரு நாயகன் போலவே படம் முழுதும் புதுமுகம் கிஷோர் ரவிச்சந்திரன், கதைக்கேற்ற நடிப்பை வழங்கி இருக்கிறார். குங்கும ராஜன் என்கிற அதிர்ஷ்டக் கட்டை கேரக்டரில் சின்னி ஜெயந்த்தின் அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது. கொலை கொள்ளைக்கு அஞ்சாத கொள்ளையன் மணி ஷர்மாவாக ஹரீஷ் உத்தமன் கச்சிதமாக பொருந்துகிறார்.

போலீஸ் அதிகாரிகளாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகரும் மாரிமுத்துவும் போலீஸ் கேரக்டர்களுக்காகவே நேர்ந்துவிடப்பட்டவர்களாக படு யதார்த்தம் காட்டுகிறார்கள் நடிப்பில். டி.இமானின் இசையில் பாடல்கள் ஹிட்டாக வாய்ப்பில்லை என்றாலும் செவிகளை குளிர்விக்க தயங்கவில்லை.

நமக்கு உரிமை இல்லாத பிறர் பொருள் மீது ஆசைப்பட்டு ஆபத்தை இலவசமாக வாங்காதே என்கிற கருத்தை ‘சாட்டை’யடியாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் அன்பழகன்.. ஆனால் அதில் வீரியமும் காரியமும் குறைவாக இருப்பது தான் ‘ரூபாய்’யின் மதிப்பை சற்றே குறைக்கிறது.