சுட்டு பிடிக்க உத்தரவு – விமர்சனம்


கோவை நகரின் மையப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் விக்ராந்த், சுசீந்திரன் உள்ளிட்ட நால்வர் எதிர்ப்படும் அனைவரையும் தாக்கி விட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் தங்களை தடுத்து நிறுத்தவரும் உதவி கமிஷனர் மிஷ்கினையும் தாக்கிவிட்டு நால்வரில் ஒருவர் சுடப்பட்ட நிலையில் மற்ற மூவரும் காரில் தப்பிக்கின்றனர்

நகரின் இன்னொரு பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு ஏரியாவுக்குள் அவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளாகி விட, அந்த பகுதியிலேயே தப்பிப்பதற்காக சுற்றி சுற்றி வருகின்றனர்.. அவர்கள் அங்கு இருப்பதை அறிந்து போலீஸ் அந்த மொத்த பகுதியையும் ரவுண்டப் செய்கிறது.

இந்த நிலையில் அதே பகுதியில் தீவிரவாதிகள் சிலர் ஒரு வீட்டின் மாடியில் தங்கியிருந்து சப்பாத்தி தயாரிப்பவர்கள் என்கிற பெயரில் வெடிகுண்டுகளை தயாரித்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் இந்த கொள்ளையர்கள் குறித்த எச்சரிக்கை விடும் போலீசார் இந்த தீவிரவாதிகளுக்கும் சாதாரண மனிதர்கள் எனக்கருதி பாதுகாப்புத் தருகின்றனர். இதனால் இந்த தீவிரவாதிகள் அன்றைய தினம் நகரில் வெடிகுண்டு ஒன்றை வெடிப்பதற்காக போட்டிருந்த திட்டம் தடைபடுகிறது.

இதையடுத்து கொள்ளையர்கள் பிடிபட்டார்களா..? சுற்றிலும் போலீஸ் கட்டுக்காவல் இருந்ததையும் மீறி தீவிரவாதிகளால் குண்டுவெடிப்பை நிகழ்த்த முடிந்ததா..? மகளின் சிகிச்சைக்காக விக்ராந்த் சுசீந்திரன் அண்ட் கோவினர் பணத்தை திருடினாலும் எதிர்ப்படும் மனிதர்களையெல்லாம் கொடூரமாக கொன்று விட்டு செல்வதற்கான காரணம் என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை ஒரே பரபரப்பு.. பரபரப்பு தான்.. விக்ராந்த் சுசீந்திரன் இருவரும் படம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.. நாமும் கூடவே சேர்ந்து ஓடுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. உதவி கமிஷனராக வரும் மிஷ்கின் அதிரடி அடாவடி போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளார். அவரது வசன உச்சரிப்பும் அதை வெளிப்படுத்தும் முகபாவமும் சபாஷ் சொல்ல வைக்கிறது.

ஹவுசிங் போர்டு பகுதியில் வசிக்கும் ஹீரோயின் அதுல்யா ரவி எதேச்சையாக தொலைக்காட்சி நிருபர் இருவருடன் சேர்ந்து கொண்டு அடிக்கும் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன. இந்த களேபரத்தை படமாக்க முயற்சிக்கும் காட்சிகள் செய்தி சேனல்களின் செய்திப்ப்சி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை காட்டும் விதமாக அமைந்திருக்கிறது. அதுல்யாவும் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை மிக சிறப்பாக செய்துள்ளார்.

இவர்கள் தவிர தீவிரவாதிகள் தங்குவதற்கு அடைக்கலம் தரும் அந்த முஸ்லிம் மனிதர் போலீசை ஒவ்வொரு கட்டத்திலும் சமாளிக்கும் காட்சியும் அந்த தீவிரவாதிகள் தங்கியிருக்கும் இடத்திற்கே வந்து அங்கிருந்து கொள்ளையர்களை கண்காணிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மனிதரும் படம் முழுவதும் ஓரளவு சுவாரசியம் தருகிறார்கள்.

சுஜித் சாரங்கின் கேமராவிற்குத்தான் இந்த படத்தில் மிகப்பெரிய வேலை.. கொள்ளைக்காரர்கள் உடன் சேர்ந்து அவரும் ஓடிக்கொண்டே இருக்கிறார் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் படத்துடன் சேர்ந்து நம்மையும் மனதளவில் ஓட வைக்கிறது. கொள்ளையர்கள் தப்பித்து ஓட, போலீசார் சுடும்போதெல்லாம் ஒரு குண்டு கூட அவர்கள் மேல் படவில்லையே என்கிற கேள்வி படம் பார்ப்பவர்களுக்கு எழும்.. ஆனால் அதற்கான விடை இறுதியில் தெரியவரும்போது நமக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது..

படத்தின் கிளைமாக்ஸில் ஒரு மிகப்பெரிய சஸ்பென்ஸ் வைத்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா.. அந்த ட்விஸ்ட் தான் ரசிகர்களை கடைசி நேரத்தில் உற்சாகப்படுத்தும் என்பதால் அதை நாம் இங்கே சொல்லப் போவதில்லை. ஆனால் அந்த ட்விஸ்ட் சுவராசியம் தான் என்றாலும் அதற்காக முன்னால் நடக்கும் காட்சிகளை ரீவைண்ட் செய்து பார்த்தீர்கள் என்றால் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் நடந்து இருப்பதை பார்க்க முடியும். குறிப்பாக வங்கியை கொள்ளை அடித்துவிட்டு வணிக வளாகத்திற்குள் தப்பிக்கும் காட்சியும் ஹவுசிங் போர்டு ஏரியாவிற்குள் கார் விபத்து ஏற்படும் காட்சியும் மிகப் பெரிய லாஜிக் மீறல்கள்.. இருந்தாலும் இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால் இந்த படம் போரடிக்காத பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு சுவாரசியமான படமே..

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *