தீதும் நன்றும் – விமர்சனம்

ரஞ்சித், ஈசன் இருவரும் பேருக்கு ஏதோ வேலை பார்த்துக்கொண்டு மிகப்பெரிய திருட்டு முயற்சிகளில் ஈடுபடுபவர்கள். ஈசன், அபர்ணாவை காதலித்து திருமணம் முடிக்கிறார். ரஞ்சித், பக்கத்து ஏரியா பொண்ணான லிஜோமோல் ஜோஸை காதலிக்கிறார். ரஞ்சித்தும் ஈசனும் ஒருமுறை டாஸ்மாக் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்யும்போது, போலீஸில் மாட்டிக்கொண்டு, சிறை தண்டனை அனுபவித்து வெளியே வருகிறார்கள். அதன்பின் மனைவி அபர்ணாவின் சொல்படி நேர்மையாக உழைக்க முடிவெடுத்தாலும், ஈசன் தனது குழந்தையின் சிகிச்சைக்காக மீண்டும் திருட்டில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகிறது.

அந்த சமயத்தில் ஈசனுக்கும் ரஞ்சித்துக்கும் மிகப்பெரிய தாதா ஒருவரின் விலையுயர்ந்த மோதிரத்தை திருடும் அசைன்மென்ட் ஒன்றை கொடுக்கிறார் அவ்வப்போது அவர்களுக்கு இதுபோன்ற வேலைகளை கொடுத்துவந்த சந்தீப் ராஜ். ஆனால் அங்கே சென்றபின் தான் தெரிகிறது ஸ்கெட்ச் போட்டது மோதிரத்தை திருடுவதற்காக அல்ல, அந்த தாதாவையே போட்டு தள்ளுவதற்காக என்று.

சந்தீப் ராஜ் எதற்காக இப்படி திட்டத்தை மாற்றினார்..? ரஞ்சித், ஈசன் இருவரும் மீண்டும் போலீசில் சிக்கினார்களா.? இல்லை சந்தீப் ராஜின் சூழ்ச்சிக்கு பலியானார்களா என்பது க்ளைமாக்ஸ்.

பூட்டிய கடையை உடைத்து கொள்ளை, ஏடிஎம் இயந்திரம் கொள்ளை முயற்சி, டாஸ்மாக்கை உடைத்து பணம் திருட்டு, ஆனால் ஈடுபட்டவர்கள் சிக்கினார்கள் என அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம்.. ஆனால் அந்த முயற்சி எல்லாம் எப்படி நடந்திருக்கும், அதன் பின்னணியில் செயல்பட்ட குற்றவாளிகள் எந்தவிதமான ஸ்கெட்ச் எல்லாம் போட்டிருப்பார்கள் என, உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றால் இந்த படத்தை தாரளமாக பாருங்கள்..,

அந்த அளவுக்கு இதில் நடித்துள்ள இந்தப்படத்தின் இயக்குனரான ராசு ரஞ்சித், ஈசன் மற்றும் சந்தீப் ராஜ் உள்ளிட்டோர் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். சூரரைப்போற்று அபர்ணா பாலமுரளிக்கு இது தமிழில் அறிமுகப்படம்.. சிறப்பாக நடித்துள்ளார். அதேசமயம் இன்னொரு நாயகியான லிஜோ மோல் ஜோஸும் அடிக்கடி தனது ரொமாண்டிக் லுக்கால் நம்மை கவர்ந்திழுக்கிறார். சந்தீப் ராஜ் நரித்தனம் கலந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்

ஏற்கனவே தமிழ்சினிமாவில் பலமுறை சலித்து சல்லடை போடப்பட்ட ‘திருட்டு நண்பர்கள்’ என்கிற கதைக்கருவை, மீண்டும் தங்கள் பாணியில் சலித்துளார் இயக்குனர் ராசு ரஞ்சித். டாஸ்மாக் கடையில் கொள்ளையடிப்பது, தாதாவின் மோதிரத்தை திருட முயற்சிக்கும் காட்சிகள் எல்லாம் திக்திக் ரகம். ஆனால் ஈசன்-அபர்ணா குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் ஒருகட்டத்துக்கு மேல் அலுப்பை ஏற்படுத்தவே செய்கின்றன. அந்த ஏரியாவில் கவனித்து கத்திரி போட்டிருக்கலாம்.