திட்டம் போட்டு திருடுற கூட்டம் – விமர்சனம்


கயல் சந்திரமௌலி, டேனியல் போப், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகியோருடன் பார்த்திபன் ஆக மொத்தம் ஐந்து பேரும் சேர்ந்து திட்டம் போட்டு ஐதராபாத்தில் உள்ள மியூசியத்தில் விலைமதிப்புள்ள ஓவியத்தை திருடுகிறார்கள்.

இந்த ஐவர் கூட்டணியை பிடிக்க ஐதராபாத் போலீஸ் தீவிர முயற்சி செய்கிறது.

இந்நிலையில் சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. அந்த உலக கோப்பையை திருடி விற்றால் அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதால் உலக கோப்பையை திருட திட்டம் போடுகிறார்கள் பார்த்திபன் உட்பட ஐந்து பேரும். ஆனால் உலக கோப்பையை திருட இந்த கூட்டணிக்கு பல தடைகள் வருகிறது.

இந்த தடைகளை எல்லாம் தாண்டி இந்த கூட்டம் உலக கோப்பையை திருடியதா? ஐதராபாத் போலீஸ் இவர்களை பிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பார்த்திபன் என்றாலே வித்தியாசம் தான். இத்திரைப்படத்திலும் பார்த்திபன் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றி அசத்தி இருக்கிறார். படத்தில் அவருக்கே உரிய நக்கல், நையாண்டி அனைத்தும் உள்ளது.

கயல் சந்திரமௌலி ஒரு மிகப்பெரிய இடைவெளிக்குப் பின் இப்படத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். சாம்ஸ், டேனி ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

சாட்னா டைட்டஸ் நடிப்பு மிகவும் அருமை. பிச்சைக்காரன் படத்தில் அமைதியாக வந்து செல்லும் இந்த சாட்னா டைட்டஸ் இப்படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளார்.

அஷ்வத் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஒளிப்பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. படத்திற்கும் பலம் சேர்த்துள்ளது.

இதுவரை கொள்ளையடிப்பதை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் உலக கோப்பையை திருட முயற்சிப்பது தமிழ் சினிமாவிற்கு புதிது.

படம் முழுக்க நிறைய நகைச்சுவை. திரைக்கதையை விறுவிறுப்புடன் நகர்கிறது.

மொத்தத்தில் “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” ரசிகர்கள் கூட்டத்தை நிச்சயம் கவரும்.