துப்பாக்கி முனை – விமர்சனம்


என்கவுன்டர் போலீஸ் அதிகாரி விக்ரம் பிரபு. ஆனால் மகன் இப்படி கொலை செய்வதை விரும்பாத விக்ரம் பிரபுவின் அம்மா, விக்ரம் பிரபுவை விட்டு பிரிந்து விடுகிறார். காதலி ஹன்சிகாவுடனும் போலீஸ் வேலையால் பிரச்சனை ஏற்பட்டு பிரிகிறார்கள்.

இந்தநிலையில் எம்.எஸ்.பாஸ்கரின் மகளை கற்பழித்து கொலை செய்த வழக்கில் ஒருவரை என்கவுண்டர் செய்ய சொல்லி விக்ரம் பிரபுவுக்கு உத்தரவு வருகிறது. ஆனால் விசாரணையில் தான் என்கவுண்டர் செய்ய இருக்கும் நபர் நிரபராதி என்றும், அந்த சிறுமியை கற்பழித்து கொலை செய்தவர்கள் வேறொருவர் என்பதை தெரிந்து கொள்கிறார்.

இறுதியில் அந்த சிறுமியை கொலை செய்தவரை விக்ரம் பிரபு என்கவுண்டர் செய்தாரா? காதலி ஹன்சிகாவுடன் இணைந்தாரா? தனது என்கவுண்டர் பணியை தொடர்ந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனான விக்ரம் பிரபு போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். அது சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது என்றே சொல்லலாம். தான் செய்யும் வேலையை மிகவும் நேசிப்பவராக மனதில் நிற்கிறார்.

நாயகி ஹன்சிகா அளவான காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சரியான இடத்தில் கதையின் தேவைக்கு ஏற்ப வந்து செல்கிறார். விக்ரம் பிரபுவுக்கு அடுத்தபடியாக நம் மனதில் நிற்பது யாரென்றால் எம்.எஸ்.பாஸ்கர் தான். அவருக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். தன் பெண்ணை இழந்து வாடும் தந்தையாகவும், குற்றவாளிக்கு தண்டனை வழங்க போராடுவதும் என்று நடிப்பில் மிளிர்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முத்துகணேஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து கவனிக்க வைத்திருக்கிறார். ராசாமதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

பெண்ணை கற்பழித்து கொலை செய்தவரை போலீஸ் எப்படி கண்டுபிடித்து தண்டனை வழங்குகிறது என்ற வழக்கமான கதையாக இருந்தாலும், திரைக்கதையில் வித்தியாசம் காண்பித்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ்.

ஆரம்பத்தில் மெதுவாக திரைக்கதை தொடங்கினாலும், சிறிது நேரத்திலேயே வேகம் எடுத்து சீட்டிலேயே நம்மை கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர். கதாபாத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

தவறு செய்பவன் சரியான நேரத்தில் தண்டிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் நிரபராதிக்கு தண்டனை கிடைக்கக் கூடாது என இறுதியில் சொல்லும் மெசேஜ் சிறப்பு.

போலீஸ் பட விரும்பிகள் இந்தப்படத்திற்கு தாராளமாக டிக்கெட் போடலாம்.