உணர்வு – விமர்சனம்


சுப்பு இயக்கத்தில் சுமன், கொட்டாச்சி, அங்கிதா நவ்யா, அருள் டி ஷங்கர், ஷினவ், வெங்கட் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் உணர்வு.

நாட்டில் பிச்சைக்காரர்களே இருக்க கூடாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ராமதுரை ( வெங்கட் ) என்பவர் கலங்கரை விளக்கம் என்ற கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். மெரினா உள்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு வேலை கொடுத்து அவர்களின் வாழ்க்கையையே மாற்றுகிறார். தவிர அவர் காண்ட்ராக்டராகவும் இருக்கிறார் .

எம் எல் ஏ ஒருவர் காண்ட்ராக்ட் எடுக்கும் விசயத்தில் போட்டி போடுவதோடு அறக்கட்டளைக்காரரை மிரட்டவும் செய்கிறார். அந்த எம் எல் ஏவுக்கு முதல்வரே பயப்படுகிறார் .இந்நிலையில் ராமதுரையை முதலமைச்சர் சுமன் நேரில் அழைத்து சென்னையில் உள்ள ஒரு கிரவுண்டை உங்களுக்கு தருகிறேன். அதை வைத்து பிச்சைக்காரர்களுக்கு எதையாவது செய்யுங்கள் என கூறுகிறார்.

அதன் பின்னர் முதலமைச்சர் தனக்கு தொந்தரவாக எம்.எல்.ஏ ( அருள் டி ஷங்கர் ) இருப்பதாக கூற அவரை நான் பார்த்து கொள்கிறேன் என வாக்கு கொடுக்கிறார் ராமதுரை. விசுவாசமான பிச்சைக்காரர் ஒருவரின் உணர்வைத் தூண்டி எம்எல்ஏவைக் கொல்ல திட்டம் தீட்டுகிறார்கள்.. இவர்களின் திட்டம் நிறைவேறியதா? இதனால் நடக்கும் விபரீதங்கள் என்னென்ன என்பது தான் இப்படத்தின் உணர்வுபூர்வமான கதை.

படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரங்களாக ‘நடித்தி’ருக்கிறார்கள். குறிப்பாக பிச்சைக்கார்களாக நடித்து இருக்கும் சிலரின் உழைப்பை பாராட்டலாம். மற்ற எல்லாருமே செயற்கையான நடிப்பு . நல்ல நடிகரான அருளையே இயல்பாக நடிக்க விடாமல் சொதப்பி இருக்கிறார்கள் . நடிகர் சுமனும் வீணடிக்கப்பட்டு இருக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரும் ஸ்கூல் டிராமாவில் நடிப்பது போல நடிக்கிறார்கள்

நகுல் அப்யங்கரின் பின்னணி இசை, டேவிட் ஜானின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய அளவு கை கொடுக்கவில்லை.. இயக்குனர் சுப்பு உணர்வுபூர்வமான கதையை கையில் எடுத்துள்ளார். ஆனால் கதைக்கேற்ற திரைக்கதை அமைப்பது, காட்சிகளின் போதுமான நீளத்தை முடிவு செய்வது ஆகியவற்றில் ரொம்பவே தடுமாறி இருக்கிறார். சில கதாபாத்திரங்கள் திடீரென படத்தில் காணாமல் போய் விட்டது, இறுதியில் அந்த பிச்சைக்காரனின் குடும்பம் என்னாவது என்றே தெரியாமல் போனது என பல கேள்விகளுக்கு விடையே இல்லை..

படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் எல்லாமே மரத்துப்போன உணர்வுதான் கொஞ்ச நேரத்திற்கு இருக்கிறது..