வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்


சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ஏ.சி.கம்பார்ட்மென்ட்டில் பயணிக்கும் எம்.பி சுமனின் மச்சினிச்சி, ஒரு டிவி நிருபர் மற்றும் துப்பாக்கி சுடும் வீராங்கனை (நீது சந்திரா) என மூன்று பேர் மதுரை செல்வதற்குள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். இதில் மற்ற இருவரும் ஸ்பாட்டிலேயே உயிரிழக்க, நீது சந்திரா மட்டும் கோமா நிலையில் இப்பவோ அப்பவோ என இறக்கும் தருவாயில் இருக்கிறார்.

இந்த வழக்கை ரயில்வே போலீஸ் அதிகாரி ஆர்.கேவிடம் ஒப்படைக்கிறார் எம்.பி சுமன். அதே பெட்டியில் பயணம் செய்த தீவிரவாதி ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரிக்கும் ஆர்.கேவுக்கு இந்த கொலையை அவர் செய்யவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.. அந்த கூபேயில் உடன் பயணித்த பலரும் அவரது சந்தேக வட்டத்துக்குள் வருகின்றனர்.

விசாரணையை வெவ்வேறு கோணத்தில் முடுக்கிவிடும் ஆர்.கேவுக்கு இந்த கொலைகளுக்கான பின்னணியும் அதன் பின்னணியில் இன்னும் சிலர் இருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரியவருகிறது.. குறிப்பாக நீது சந்திராவின் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு பின்னணியில் ஒளிந்திருக்கும் காரணமும் திகைக்க வைக்கிறது.. இறுதியில் குற்றவாளி யார், அவருக்கு என்ன தண்டனை கிடைக்கிறது என்பது எதிர்பாராத க்ளைமாக்ஸ்..

துப்பறியும் போலீஸ் அதிகாரியாக ஆர்.கேவுக்கு மிக பொருத்தமான கேரக்டர்.. கொலைக்கான காரணங்களை புதிய கோணங்களில் ஆராய்வதும் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்ப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக குற்றவாளிகளை நெருங்குவதும், எதிரிகளை வெளுத்து எடுப்பதும் என ஒரு துணிச்சல் போலீஸ் அதிகாரிக்கான இலக்கணம் ஆர்.கேவின் நடிப்பில் பிரதிபலிக்கிறது..

ஜோதிகா, ராதிகா என இரட்டை வேடங்களில் நடித்துள்ள நீது சந்திரா, இரண்டையும் தனது வித்தியாசமான நடிப்பால் வேறுபடுத்தி காட்டியுள்ளார்.. அவரை சுற்றியுள மர்மம் விலகும் அந்த க்ளைமாக்ஸ் தருணம் நமக்கு ஷாக் அடிக்கிறது..

ஆர்..கேவுடன் படம் நெடுக போலீஸ் அதிகாரியாக வரும் நாசர் கலகலப்பூட்டுகிறார்.. படம் முழுவதும் மற்ற நடிகர்களின் பங்களிப்பு சம அளவில் இருப்பது படத்துக்கு ப்ளஸ்.. டிடி.ஆர் எம்.எஸ்.பாஸ்கர், ரயில்வே போலீஸ் ஜான்விஜய், நடிகையாக வரும் இனியா, டிவி நிருபராக வரும் கோமல் சர்மா, அட்டெண்டராக நடித்துள்ள மலையாள நடிகர் அனூப் சந்திரன், சங்கீத சிகாமணியாக நடித்துள்ள சித்திக், சுமன், ரமேஷ் கண்ணா, டாக்டர்களாக சுஜா வருணீ, பவன், ஆர்.கே.செல்வமணி, கதாசிரியராக மனோபாலா, சிங்கமுத்து என அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதற்காக இயக்குனர் ஷாஜி கைலாஷையும் நாயகன் ஆர்.கேவையும் தாராளமாக பாராட்டலாம்.

கதையின் மிக முக்கிய சிறப்பம்சமே எதிர்பாராத திருப்பங்கள் தான். அதிலும் அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சான்ஸே இல்லை. குறிப்பாக எந்த ரயிலில் கொலை நடைபெற்றதோ அதே ரயிலில் வைத்து கொலைகாரர்களையும் கண்டுபிடிக்கும் க்ளைமாக்ஸ் யுத்தி தமிழ் சினிமாவுக்கு புதுசு.. சஞ்சீவ் குமாரின் ஒளிப்பதிவு, தமன்னின் பின்னணி இசை, பிரபாகரின் வசனம் மூன்றுமே படத்தின் வேகத்துக்கு முதுகெலும்பாய் அமைந்துள்ளன..

இரண்டகால் மணி நேரம் விறுவிறுப்பான த்ரில்லிங்கான அனுபவத்தை தந்ததற்காக ஆர்.கே-ஷாஜி கைலாஷ் கூட்டணிக்கு தாராளமாக ஒரு ஜே போடலாம்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *