வீரையன் – விமர்சனம்


தஞ்சாவூர் பகுதியில் ஒரு சாதாரண கிராமத்தில் வசிக்கும் வீரையன் (ஆடுகளம் நரேன்) தனது தம்பிகளை கஷ்டப்பட்டு படிக்கவைத்து நல்ல நிலைக்கு ஆளாக்கி விடுகிறார். ஆனாலும் தம்பிகள் அவரை உதாசீனப்படுத்தவே, பிளஸ் டூ படிக்கும் தனது மகனை பெரிய ஆளாக்கி காட்டுவதாக சவால் விடுகிறார். நன்றாக படிக்கவைக்கவும் மெனக்கெடுகிறார்

இதற்கிடையே, கவுன்சிலரான வேல ராமமூர்த்தியின் மகள், அவரது கார் டிரைவரை காதலிப்பதுடன், அவருடன் ஊரைவிட்டு ஓட முயற்சிக்க, அது இனிகோ பிரபாகரால் தடைபடுகிறது இந்த விஷயத்தில் பள்ளியில் படிக்கும் தனது மகளை காதலிப்பது நரேனின் மகன் தான், என்று தவறாக நினைத்துக் கொள்ளும் வேல ராமமூர்த்தி, நரேனின் மகனை பள்ளியில் இருந்து நீக்கும்படி செய்துவிடுகிறார்

அதேசமயம் நரேனின் மகன் படிப்பு தடைப்பட்டதற்கு தானும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து, அவரை டுடோரியல் மூலமாக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து படிக்கவைக்கிறார் இனிகோ. இவர்களது எண்ணம் எந்த தடையும் இல்லாமல் ஈடேறியதா என்பது மனதை கணக்க வைக்கும் க்ளைமாக்ஸ்.

வெட்டி ஆபிசராக வலம் வரும் கதாபாத்திரத்தில் இனிகோ பிரபாகரன் கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, கதாபாத்திரத்தை உணர்ந்தும் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷைனி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இன்னொரு நாயகன் என சொல்லும் வகையில் தம்பிகளையும் மகனையும் படிக்க வைப்பதற்காக போராடும் சாதாரண தொழிலாளியாக வாழ்ந்திருக்கிறார்.

முருகேஷாவின் ஒளிப்பதிவு வஞ்சகம் இல்லாமல் பட இறுதிவரையிலும் கிராமத்து அழகை அள்ளி வந்திருக்கிறது.. கிராமத்தின் இயல்பான லைட்டிங்கையும் அந்த பாழடைந்த கட்டடங்களையும் அவ்வளவு அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார். கவுன்சிலர் மகள்-ட்ரைவர் காதல் கதையை விட்டு துருத்திக்கொண்டு இருப்பது போல தெரிந்தாலும், க்ளைமாக்ஸில் அதை சிறிய ட்விஸ்ட் மூலம் நேர் செய்திருக்கிறார் இயக்குனர் பரீத்.

கல்விதான் ஒருவனின் வாழ்க்கையை முன்னேற்றும் என்பதையும், அப்படிப்பட்ட ஒருவனுக்கு படிப்பு வாசனையே இல்லாத ஒருவன் உதவுவதையும் இரண்டு தளங்களாக பிரித்து கதைசொல்லியிருக்கிறார் இயக்குனர் பரீத்.. ஒரு பக்கம் தந்தை – மகன் பாசப்போராட்டம், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் கதையை நகர்த்தி, வெகு சிரமத்துடன் அதை ஒரே புள்ளியில் கொண்டுவந்து சேர்க்கிறார் இயக்குநர் பரீத். ஆனால் தெளிவில்லாத திரைக்கதையால் நம் மனதில் அழுத்தமாக பதிய வைக்க தவறியுள்ளார் பரீத்.