வாராவாரம் வெள்ளிகிழமை அதுவுமா தொடர்ந்து ஒரு பேய்ப்படத்தை ரிலீஸ் பண்ணி ரசிகனை மிரட்டுறதுன்னு இப்ப நிறைய பேர் இறங்கிட்டாங்க.. அந்த வரிசையில் இந்த வார என்ட்ரி தான் ‘உனக்கென்ன வேணு சொல்லு’.
பூஜாவும் கார்த்திக்கும் திருமணமாகாமலேயே லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தியதில் பூஜா கர்ப்பமாகிறார்.. பூஜாவின் பிரசவ சமயத்தில் புதிய வேலை தேடி கார்த்திக் சிங்கப்பூர் சென்றுவிட, அந்த சமயத்தில் குழந்தை பிறக்கிறது. அதை தோழி ஸ்வேதாவின் ஆலோசனையுடன் அநாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகிறார் பூஜா.
திரும்பிவந்த கார்த்திக்கிடம் குழந்தை இறந்துவிட்டதாக நாடகம் ஆட, பூஜாவை வெறுத்து வெளியேறுகிறார் கார்த்திக்.. பின்னர் பூஜா சிங்கப்பூரில் இருக்கும் சிவாவை திருமணம் செய்து, ஒரு சிறுவனுக்கு தாயாகி அங்கேயே செட்டிலாகிறார். அங்கே மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அதே நேரத்தில் இங்கே சென்னையில் பூஜாவின் தோழி ஸ்வேதா தற்கொலை செய்துகொண்டு இறக்கவே இரண்டு விஷயங்களுக்காகவும் சென்னை வருகின்றனர் பூஜாவும் கணவர் மற்றும் குழந்தையும்.
வந்த இடத்தில் தனது பங்களாவில் சில வித்தியாசமான நடவடிக்கைகளை உணர்கிறார் பூஜா.. மாத்யூ என்பவர் மூலமாக, ஸ்வேதா தற்கொலை செய்துகொண்டதற்கும், தன் மகன் உடல்நிலை சரியில்லாமல் போய் தான் இங்கே வரவழைக்கப்பட்டதற்கும் காரணம் தனக்கு ஏற்கனவே பிறந்த குழந்தையின் ஆவி தான் என்கிற உண்மை தெரியவர அதிர்ச்சியடைகிறார் பூஜா..
அநாதை ஆசிரமத்தில் விடப்பட்ட குழந்தை எப்படி இறந்தது, பூஜாவை இங்கே வரவழைத்ததன் நோக்கம் என்ன என பல கேள்விகளுக்கு திகிலுடன் விடை சொல்கிறது கடைசி பத்து நிமிட க்ளைமாக்ஸ்.
இந்தப்படத்தில் பூஜாவாக வரும் ஜாக்லின் பிரகாஷ், கார்த்திக்காக வரும் தீபக் பரமேஷ், பேய்களை விரட்டும் மேத்யூவாக வரும் மைம் கோபி இவர்கள் மூவரும் தான் படத்தின் வலுவான தூண்கள்.. அதிலும் மைம் கோபியிடம் யதார்த்தம் தூக்கல். குழந்தை பேயாக நடித்திருக்கும் அனுவிடம் வீரியம் குறைவுதான்.
தனிமையான பங்களா, கும்மிருட்டு, ஏதாவது சத்தம் கேட்டால், லைட்டை போடாமல் இருட்டிலேயே ஒவ்வொரு ரூமாக தேடுவது, பேய் தான் வந்த வேலையை டக்கென முடிக்காமல் படம் முழுவதும் இழுப்பது, பேயை ஓட்ட முயற்சிக்கும் மந்திரவாதி/சாமியார் சாவது என வழக்கமாக ஒரு பேய்ப்படத்தில் இடம்பெற கூடிய அத்தனை ஐட்டங்களும் இதிலும் டிட்டோ.. டிட்டோ..
ஆனால் கருவில் இருக்கும் குழந்தையிடம் வாக்கு கொடுத்துவிட்டு அதன்படி நடக்காமல் போனதால் அப்பா அம்மாவை தேடிவந்து பயமுறுத்தும் குழந்தைப் பேயை இப்போதுதான் சினிமாவில் பார்க்கிறோம். தன்னை அநாதை ஆசிரமத்தில் கொண்டுபோய் போட்டதற்காக பூஜாவின் தோழி ஸ்வேதாவை கொள்வது ஒகே.. ஆனால் தன்னை எடுத்து வளர்க்கிறேன் என தனக்கு சரியான தீனி போடாமல், தன்னை பட்டினி மரணத்தை தழுவ வைத்த வளர்ப்புத்தாயை சும்மா விட்டுவிடுவது என்ன லாஜிக்கோ..
அதுமட்டுமல்லாமல், அந்த வளர்ப்புத்தாயின் வீட்டில் எப்போதோ இறந்த குழந்தையின் எலும்புக்கூடு இப்போதும் இருப்பதாகவும், இறுதியில் அதை பூஜா எடுத்து எரிப்பதாகவும் காட்டுவது சரியான பூ சுத்தல்.. பின்னணி இசையால் அடிக்கடி நடுக்கத்தை வரவழைக்கிறார் இசையமைப்பாளர் சிவசரவணன். குறிப்பாக மைம் கோபி பூஜாவின் வீட்டில் பேய் இருப்பதை கண்டறியும் காட்சி தலைமுடியை நட்டுக்கொள்ள வைக்கிறது… இறுதியில் குழந்தையின் தந்தை கார்த்திக் எடுக்கும் முடிவு நம்மை நெகிழ வைப்பதென்னவோ உண்மை… ஒரு ஜனரஞ்சகமான பெய்ய்ப்படத்தை புதுவித காரணத்துடன் தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.
ஆனாலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தரும் நிறைவை முழு படமும் தரவில்லை என்பதே உண்மை.
Verdict – 2.8/5