ஜம்புலிங்கம் 3D விமர்சனம்

இந்தியாவும் இப்படி மாறினாத்தான் எப்படி…. அந்த நாள் நல்ல நாள் எந்த நாளோ… நம்ம ஊரு ஜோசியன் சொல்லுவானோ… அன்னைக்கே ஜப்பான் அப்படி…. இன்னைக்கும் அப்படி அல்லது அதைவிட மேல… நம்ம ஊருக்குத்தான் ஜோசியன் என்னும் நாள் குறிக்கல போல. ஆங்.. அதான் குறிச்சுட்டான்ல மே 16.

அட, ஜம்புலிங்கம் 3 டி என்ன அரசியல் படமா..? இல்லவே இல்லை முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு படம். ஆனால், இரட்டை இயக்கு நர்களான ஹரிஷ் மற்றும் ஹரேஷ் அவர்களையறியாமலேயே பெரியவர்களைச் சிந்திக்க வைக்கும் படமாகவும் ஜம்புலிங்கம் 3 டியைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஜப்பானில் ஜம்புலிங்கம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ என்னமோ! ஜம்போ கோகுல் மேஜிக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். அவர் ஆசைப்பட்ட நேரம் ஜோக் ஜேப்பிக்கு அதிஷ்டம் அடிக்கிறது. ஜப்பானுக்கு மேஜிக் செய்ய அவருக்கு அழைப்பு வர, வாய்பேசமுடியாத தன் தாய் கலாராணியை தனது நண்பர்கள் பொறுப்பில் விட்டு விட்டு, ஜப்பானுக்கு கிளம்புகிறார். எடுபிடியாகச் செல்லும் கோகுல், எல்லோரும் திரும்பிப்பார்க்கும் மேஜிசியனாக மாறுகிறார். நடுவில், அவரும் தொலைந்து போய், ஏற்கனவே தொலைந்து போகும் ஹம்சியைம் சந்தித்து அவளது பெற்றோர்களுடன் சேர்க்கும் போராட்டமாக கதை நகருகிறது.

நடுவில், கோகுல் ஹம்சியின் அம்மா சுகன்யாவைச் சந்திக்கிறார், ஹமிசியின் அப்பா வில்லன்களுக்குHamsika in Jambulingam 3 D வைக்கும் பணப்பெட்டியை என்ன ஏதென்று தெரியாமல் அவரிடமே திருப்பிக் கொடுக்கிறார். சுமோ வீரர் ஒருவருருடன் மோதுகிறார், அஞ்சனாவுடன் டூயட் பாடுகிறார். கோகுல், தனது காட்சிகளைத் தானே வடிவமைத்து 100 சதவிகிதம் மெனக்கட்டு கைதட்டல் வாங்கிவிடுகிறார்.

பெரும்பாலும், இன் – டோர் எனப்பட்டும் அரங்கிற்குள்ளேயே காட்சிகள் நகர்ந்தாலும் வெளிப்புறப் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கும் தொயாமா நமக்கு நிறையச் சொல்லாமல் சொல்கிறது. அங்கேயும் நீர் நிலைகள் இருக்கின்றன, நம்மூரிலும் இருக்கின்றன. ஜப்பானில் கல்யாணராமன் வந்து 25 வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தாலும், ஜப்பானில் இருக்கும் நீர் நிலைகளில் இன்னமும் பத்திரமாக அல்லது அன்றைய தினத்தை விட மேலும் அழகாக இருக்கின்றன. ஆனால், நம்மூரில்..?

அதான் சொன்னேன்ல, குழந்தைகள்னா முழுக்க முழுக்க ரசிக்கச்சொல்லும் – நாமதான் வளர்ந்த குழந்தையாச்சே நம்மூரு என்னைக்கு இப்படி மாறும் என்று நம்மளையறியாமலே சிந்திக்கத் தொடங்கிவிடுகிறது.

கோகுலின் உள்ளூர் நண்பர்கள் செந்தில்குமரன் அண்ட் கோவும் ஜப்பான் நண்பர்கள் ஈரோடு மகேஷ் அண்ட் கோவும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். அதுவும் மகேஷை வில்லன் தன் கையுடன் சேர்த்து விலங்குமாட்டிக்கொள்ள, அவருடன் பாத் ரூமுக்கும் பெட் ரூமுக்குமாக மகேஷ் பயணிப்பது கிச்சுகிச்சு ரகம்.

இயல்பில் வாய்பேச முடியாத ஹம்சியை தனது மேஜிக்காலும் – அதிர்ச்சி வைத்தியத்தாலும் பேசவைத்து விடுகிறார் கோகுல். ஹம்ச், இயல்பாக வந்துபோகும் குழந்தை நட்சத்திரம்.

3 டி எஃபெக்ட்டில் திகில் காட்சிகள் மட்டும் தான் ரசிக்கும் படி இருக்குமா என்ன..? சுகன்யாவின் பரத நாட்டிய அபி நயமும் அழகாக இருக்கிறது… நமது மனதை 3 டி எஃபெக்ட் மூலம் ஆரம்பித்திலேயே கொய்துவிடுகிறார்.

புறப்பட்டு வந்தா 12- 18 மணி நேரப்பயணம் , அதற்குள்ளாக கோகுலின் வீடியோவை மொபைலில் பார்த்து குணமாகும் அம்மா. – இந்தக் காட்சியமைப்பு அருமை.

ஸ்ரீவித்யாவின் இசையில், ஜப்பான் குழந்தைகள் குத்தாட்டம் போடுவது கொள்ளை அழகு. மேஜிக்கினை மையக்கருவாகக் கொண்ட படம் என்பதை நினைவு படுத்திக் கொண்டிருக்கும் ஜி வெங்கட் பிரபு சங்கரின் பின்னணி இசையும் நன்று.

குறைகள் இருந்தாலும் மழலைகளிடம் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது தானே!