“நாம் கஷ்டப்பட்டபோது நமக்கு உதவியவர்களுக்கு நாம் நன்றாக இருக்கும்போது உதவலேன்னா வேறு யார் உதவப்போறாங்க” என்று தர்மதுரை பட பத்திரிகையாளர் சந்திப்பின்போது இயக்குனர் சீனுராமசாமி ஒரு வார்த்தை ‘நச்’சென்று சொன்னார். காரணம் விஜய்சேதுபதியை ஹீரோவாக மாற்றியவர் அவர்தான்.. அதேசமயம் அவர் பட வாய்ப்பு இல்லாமல் தவித்தபோது அவருக்கு இப்பொது கைகொடுத்திருப்பதும் விஜய்சேதுபதிதான்.
ஆனால் இந்த நன்றி, விசுவாசம் எல்லாம் சீயான் விக்ரமிடம் இருப்பதாக தெரியவில்லை. ஹரி டைரக்சனில் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதாக இரண்டு தினங்களுக்கு முன் அவரது ‘இருமுகன்’ பட விழா மேடையிலேயே அறிவிப்பு வெளியானது..
சேது, காசி என சாப்ட் ஹீரோவாக விக்ரம் தனது மறுபிறவியை ஆரம்பித்த நிலையில் அவருக்கு ‘சாமி’ படம் மூலம் ஹிட் கொடுத்து அவரது இமேஜையே மாற்றியவர்களில் ஒருவர்தான் ஹரி. இப்போதும் வெற்றிப்பட இயக்குனராக வரும் ஹரியுடன் விக்ரம் இணைந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால் அதேசமயம், ஹரிக்கு முன்பே விக்ரமின் திறமையை கண்டறிந்து அவரை ஆக்சன் ஹீரோவாக தனது ‘தில்’ மற்றும் ‘தூள்’ படங்களின் மூலம் மாற்றியவர் இயக்குனர் தரணி. ஹரியாவது சாமி என்கிற ஹிட்டையும் அருள் என்கிற ஆவரேஜ் படத்தையும் தான் விக்ரமுக்கு தந்தார்.
ஆனால் தரணி விக்ரமுக்கு தந்த இரண்டு படங்களுமே மாஸ் ஹிட் தான். ஆனால் சிம்புவை வைத்து ‘ஒஸ்தி’ என்கிற படத்த எடுத்து வீணாப்போன குற்றத்திற்காகவே அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வருகிறார் தரணி. இத்தனைக்கும் இவரும் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள்.
‘உழைப்பாளி’ படத்திற்கு பிறகு 12 வருடம் கழித்து பி.வாசுவுக்கு ஒரு ‘சந்திரமுகி’ வாய்ப்பு தந்து ரஜினி அவரை கைதூக்கி விடவில்லையா..? சீயானுக்கு மட்டும் ஏன் அப்படி ஒரு மனம் இல்லாமல் போனது என விக்ரம் ரசிகர்கள் பலரே ‘இருமுகன்’ விழாவில் வருத்தப்பட்டு பேசிக்கொண்டதை பார்க்க முடிந்தது.