பல லட்சங்களை நன்கொடையாக வாங்கிக்கொண்டு அங்கீகாரம் பெறாத மருத்துவ கல்லூரியில் உங்கள் வீட்டு பிள்ளைக்கு இடம் கொடுத்தால்..? வாங்கிய பணத்தை தராமல் ஆள்பலம் அதிகார பலம் ஆகியவற்றால் மிரட்டினால்..? இன்னும் ஒரு பட்டி மேலாக சம்பந்தப்பட்ட மாணவியையே கார் ஏற்றி கொன்றால்..? கேட்கவே கொதிக்கிறது இல்லையா..? அப்படி தன வீட்டில் நடந்த அநியாயம் கண்டு ஊரார் பிள்ளைகளுக்கும் செத்தும் கொதித்தெழும் ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் கதைதான் இந்த எய்தவன்..
மேலே சொன்ன விஷயங்கள் எல்லாமே மருத்துவ கல்லூரி நடத்தும் கௌதமால் கலையரசனுக்கு நிகழ்கின்றன. உடம்பு பலத்தால் அல்லாமல் புத்தி பலத்தால் அவனை கலையரசன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மீதிப்படம்.
சின்னச்சின்ன படங்களின் கதாநாயகனாக நடித்துவரும் கலையரசனை ஒரு கமர்ஷிய ஹீரோ என்கிற ஆரம்ப படிக்கட்டில் இந்தப்படம் ஏற்றிவிட்டு இருக்கிறது.. இதேபோல இன்னும் சில நல்ல படங்களை தேர்ந்தெடுத்தால் கலையரசனுக்கான ஒரு கமர்ஷியல் இடமும் உருவாகும். படத்தில் அவரது பங்களிப்பை இப்படி மறைமுகமாக கூட சொல்லலாம்.
‘பிச்சைக்காரன் நாயகி’ சாத்னா டைட்டஸ் அழகும் ஆர்ப்பாட்டமுமாக போலீஸ் அதிகாரி வேடத்தில் மிடுக்கு காட்டியுள்ளார். வில்லன் கௌதம் ஹைடெக் வில்லத்தனம் காட்டி வசீகரிக்கிறார். ஆடுகளம் நரேனுக்கு இந்தப்படத்தில் மிகப்பெரிய வேலை தரப்பட்டுள்ளது. ஜமாய்த்திருக்கிறார். ரவுடி தர்மாக வரும் கிருஷ்ணா தனது நடிப்பால் அட, அடடே என்று இரண்டுவிதமான ரியாக்சன்களை நம்மிடம் ஏற்படுத்துகிறார். வேலா ராமமூர்த்தி, விக்னேஸ்வரன் என உப கதாபாத்திரங்களும் தங்கள் தேவை நியயப்படுத்தின்றனர்.
இதுவும் ஒரு சாதாரண படம் தானே என தியேட்டருக்குள் நுழையும் ரசிகனுக்கு திரைக்கதையில் நிறைய ஆச்சர்யங்கள் வைத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சக்தி ராஜேந்திரன்.. ஒரு மிகப்பெரிய ஆக்சன் கதைக்கான அவடிவமைப்பை கதாநாயகன் கலையரசன் என்பதாலோ என்னவோ கொஞ்சம் சமரசம் செய்து காட்சிப்படுத்தி இருக்கிறார்.
மற்றபடி படம் பார்த்துவிட்டு வெளியேபோகும் ரசிகர், தனது நட்பு வட்டாரத்திடம் ‘எய்தவன்’னு ஒரு படம் வந்திருக்கு தாராளமா போய் பாருப்பா என சொல்லும்படியான படமாக இதை உருவாக்கியதில் இயக்குனர் சக்தி ராஜேந்திரன் நம்பிக்கை தரும புதுவரவாக தெரிகிறார்.