தனது கடன் பிரச்சனைகளை சமாளிப்பதற்காக வைரங்களை கடத்தும் முனீஸ்காந்திடம் வேலைக்கு சேர்கிறார் ஆதி.. சின்னச்சின்ன கடத்தல்களை விட பெரிதாக ஒன்றை செய்து கோடிகளில் பணம் பார்க்க ஆசைப்படுகிறார் ஆதி. அதற்கேற்ற மாதிரி மரகத நாணயத்தை எடுத்து தரச்சொல்லி ஒரு ஆபர் ஆதியை தேடி வருகிறது..
ஆனால் அதற்குமுன்பே 132 பேர் அந்த மரகத நாணய தேடலில் தங்கள் உயிரை விட்டிருப்பதும் தெரியவருகிறது.. இந்தநிலையில் மந்திரவாதி கோட்டா சீனிவாசராவ் மூலமாக அந்த மரகத நாணயத்தை கைப்பற்றுவதற்கான, மிக மிக ரிஸ்க்கான ஒரு வழி ஆதிக்கு கிடைக்கிறது.. ஆதியை தேடி வந்தது ஆபரா இல்லை ஆப்பா..? அது என்ன ரிஸ்க்கான வழி..? ஆதிக்கு என்ன முடிவு ஏற்பட்டது என்பதெல்லாம் மீதிக்கதை..
மரகத நாணயம் பற்றிய பிளாஸ்பேக் சுவாரஸ்யம் தருகிறது.. ஆதிக்கு ஜஸ்ட் லைக், போகிறபோக்கில் அசால்ட்டாக செய்யும் கேரக்டர் என்பதால் அதில் பிட்டாக பொருந்தி இருக்கிறார்.. நிக்கி கல்ராணியின் கேரக்டர் வடிவமைப்பு சொதப்பல்.. அவர் படம் முழுதும் வீணடிக்கப்பட்டு இருக்கிறார் என்பதே உண்மை.. நாயகி நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜ் ஆகியோரின் கேரக்டர்களில் ஒரு ட்விஸ்ட் ஒளிந்திருப்பதால் அவர்களை பற்றி டீடெய்லாக சொல்ல முடியாது.. ஆனால் அதகளம் பண்ணியிருக்கிறார்கள் காமெடியில்.
ஆனால் மொத்தப்படத்தில் முக்கால்வாசியை முனீஸ்காந்தும் மீதியை ஆனந்தராஜும் தங்கள் கைக்குள் கொண்டுவந்து விடுகிறார்கள். சமீபகாலமாக சொதப்பி வந்த முனீஸ்காந்தை மீண்டும் பார்முக்கு திரும்ப வைத்துள்ளது இந்தப்படம்.. ஆனந்தராஜுக்கோ இது இன்னொரு ‘நானும் ரவுடி தான்’.. சுமார் மூஞ்சி டேனியும் ஓரளவு சோபிக்கிறார்.. மைம் கோபி, கோட்டா சீனிவாசராவ் அளவான பங்களிப்பை தந்துள்ளனர்.
ஆவிகள் என்கிற விஷயத்தை இந்தப்படத்தில் பயன்படுத்தியுள்ள விதம் புதிது.. அதை த்ரில்லுக்கு பயன்படுத்தாமல் காமெடிக்கு பயன்படுத்திய விதமும் சிறப்பு.. க்ளைமாக்ஸில் எல்லோரையும் கொல்ல துரத்தும் அந்த வாகன எபிசோட் செம த்ரில்..
அறிமுக இயக்குனர் சரவண் திரைக்கதையில் இன்னும் சில இடங்களில் பட்டி, டிங்கரிங் பார்த்து பூசியிருந்தால் ஒரு கமர்ஷியல் ஹிட்டுக்கான அம்சங்களை கொண்ட படமாக இந்த மரகத நாணயம் ஜொலித்திருக்கும்.