இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்து வெற்றிக்கொடி கட்டிவருகிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக இருந்தபோதும் சூபர்ஹிட் பாடல்களை கொடுத்தவர்தான்.. ஆனால் தான் இசையமைப்பாளர் ஆனதே ஒரு விபத்து தான் என கூறியுள்ளார் விஜய் ஆண்டனி..
விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று ‘அண்ணாதுரை’ படம் வெளியாகியுள்ளது. ஜி.சீனிவாசன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன் படத்தின் எடிட்டிங்கையும் கவனித்துள்ளார். இன்று படம் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, அதற்காக ஏற்பாடு செய்யப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி, பத்திரிகையாளர்களுடன் தனது சினிமா பயண அனுபவங்கள் குறித்து ரொம்பவே இயல்பாக கலந்துரையாடினார்.
குறிப்பாக கல்லூரி காலத்தில் மற்றவர்களை கவர்வதற்காகவே இசைத்துறையை கையில் எடுத்ததாக விஜய் ஆண்டனி, முதல் வருடம் கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடிய தைரியத்தில் இரண்டாவது வருடம் படிக்கும்போதே தான் இசையமைக்கும் முதல் படமென்றால் அது மணிரத்னம் படமாகத்தான் இருக்கும் என நண்பர்களிடம் சொல்லுவாராம்.
ஆனால் முறையாக எந்த இசையையும் கற்றுக்கொண்டு தான் சினிமாவுக்குள் நுழையவில்லை என்றும் வெளிப்படையாக கூறினார்.. கேள்வி ஞானத்தை வைத்தே இசையமைப்பதாக கூறிய விஜய் ஆண்டனி, தன்னைப்பொறுத்தவரை படங்களுக்கு பாடல்கள் என்பதே தேவையில்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்தார்.