என் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்


ராணுவ வீரரான அல்லு அர்ஜூனுக்கு நமது நாட்டு எல்லையில் நின்று பணிபுரியவேண்டும் என்பது லட்சியம்.. ஆனால் அவரது முரட்டுத்தனமான கோபம் அதற்கு தடையாக இருக்கிறது. அந்த கோபம் தான் சிறுவயதில் அவரது தந்தையை எதிர்த்து குடும்பத்தை வீட்டைவிட்டு வெளியேறவும், நேசித்த காதலி அனு இம்மானுவேலையும் பிரிய வைக்கிறது.

இந்தநிலையில் டூட்டியில் மேலதிகாரி உத்தரவின்றி ஒரு தவறு செய்கிறார் அல்லு அர்ஜுன். கடைசி வாய்ப்பாக பிரபல மனோதத்துவ மருத்துவரான அர்ஜுனிடம் சென்று அவர் நார்மலான நபர் தான் என சான்றிதழ் வாங்கிவந்தால் மீண்டும் பணியில் சேரலாம் என அவருக்கு உத்தரவிடுகிறார் உயர் அதிகாரி..

தன்னை தேடிவரும் அர்ஜுனுக்கு 21 நாட்கள் டைம் கொடுத்து, அவரது கோபத்தை அடக்கி இயல்பான மனிதனாக அவரது நடவடிக்கைகளை மாற்றிக்காட்டுமாறு அசைன்மென்ட் கொடுக்கிறார். அமைதியாக தன்னை மாற்ற முற்படும் அல்லு அர்ஜூனுக்கு எதிர்பாரத விதமாக அந்த நகரத்தின் தாதா சரத்குமாரிடம் இருந்தும் அவரது மகனிடமிருந்தும் சிக்கல் வருகிறது. அநியாயம் கண்டு வழக்கம்போல அல்லு அர்ஜூன் பொங்கினாரா..? இல்லை அமைதியாக இருந்து சான்றிதழ் பெற்று தனது லட்சியத்தை அடைந்தாரா என்பது க்ளைமாக்ஸ்,

ஏன்யா அடிச்ச, ஏன்யா சுட்ட என கேட்கும் உயரதிகாரியிடமே, கோபம் வந்துச்சு சார் அடிச்சேன், சுட்டேன் என நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்லும் ராணுவ வீரர் கேரக்டரில் அல்லு அர்ஜூன் செம தில்லு அர்ஜூன். அதேபோல அர்ஜூனின் கேள்விகளுக்கும் தெனாவட்டாக பதில் சொல்லும் அல்லு அர்ஜூன், இடைவேளைக்குப்பின் அப்படியே சாந்த சொரூபியாக மாறி ஆச்சர்யப்படுத்துகிறார்.. சண்டைக்காட்சிகளில், நடன காட்சிகளில் புதிய மிரட்டல் தெரிகிறது. அதிலும் சரத்குமார் பாணியிலேயே அவருக்கு சவால் விடும் காட்சி அதிரடி.

அர்ஜூன், சரத்குமார் என இரண்டு முக்கிய நடிகர்களை இரண்டு வித களங்களில் பயன்படுத்தியுள்ளார்கள். அதில் அர்ஜூன் பாஸ்மார்க், இல்லையில்லை பர்ஸ்ட் மார்க்கே வாங்குகிறார். சரத்குமார் தாதாவாக கெத்து காட்டினாலும், அவரது கேரக்டரை பலவீனமாக வடிவமைத்துள்ளார்கள் என்பதில் வருத்தமே..

நாயகியாக வரும் அனு இம்மானுவேல் பெரிய அளவில் நம்மை ஈர்க்கும் வசீகரம் கொண்டவராக இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். மகனை பிரிந்த அம்மாவாக நதியா, ராணுவ உயரதிகாரியாக வரும் பொம்மன் இரானி, கால் ஒடிந்த கார்கில் போரட்ட வீரராக சாய்குமார், அவரது மகன், அல்லு அர்ஜூனின் நண்பனாக வரும் வெண்ணிலா கிஷோர் என மற்ற சில கதாபாத்திரங்களும் படத்தை தாங்கிப்பிடிக்கின்றனர்.

படத்தை இயக்கியுள்ள இயக்குனர் வம்சி, நாட்டுப்பற்றை மையாக குழைத்து பேனாவில் ஊற்றி இந்தப்படத்தின் கதையை எழுதியிருப்பார் போல.. காட்சிகளிலும் வசனங்களிலும் அனல் பறக்கிறது.. சிற்சில காட்சிகளில் தொய்வும் அயற்சியும் ஏற்பட்டாலும் அதை அழகாக ஈடுகட்டி படத்தை நகர்த்தியுள்ளார்.

குறிப்பாக, இங்குள்ள முஸ்லீம் இளைஞன் ஒருவனை இது எனக்கான தேசம் இல்லை என தவறாக உணர வைக்கும் இந்த சிஸ்டத்தின் மீது சாட்டையை சொடுக்கியுள்ளார் இயக்குனர்.. அல்லு அர்ஜுனின் கேள்வியில் அவ்வளவு பெரிய தாதாவான சரத்குமார் தலைகுனிந்து நிற்கும் காட்சி ஒன்றே இதற்கு சாட்சி. துடிப்புடன் கூடிய பொழுதுபோக்கு படம் பார்க்க விரும்புவர்கள் இந்தப்படத்திற்கு உடனே டிக்கெட் போடலாம்.