தாதா பிரகாஷ்ராஜிற்கு அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு என மூன்று மகன்கள்.. கோவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் பிரகாஷ்ராஜ் மீது நடக்கும் கொலைமுயற்சியில் மயிரிழையில் தப்பிக்கிறார். வெளிநாட்டில் செட்டிலான அருண் விஜய்யும் சிம்புவும் இதையறிந்து ஊர் திரும்புகிறார்கள். இதற்கு காரணமானவர் யார் என அரவிந்த்சாமி தனது போலீஸ் நண்பன் விஜய்சேதுபதியை விட்டு கண்டுபிடிக்க சொல்கிறார். தங்களது எதிரியான தியாகராஜனின் வேலையாக இது இருக்கலாம் என நினைத்து அவரது மருமகனை போட்டுத்தள்ளுகிறார் அரவிந்த்சாமி.
அருண் விஜய்யும் சிம்புவும் மீண்டும் வெளிநாட்டுக்கு கிளம்பிப்போன நிலையில் ஹார்ட் அட்டாக்கில் மரணமடைகிறார் பிரகாஷ்ராஜ். இங்கே தந்தையின் இடத்தை, தான் பிடிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து தம்பிகள் இருவரையும் திரும்ப விடாமல் தடுக்கும் முயற்சிகளை நண்பன் விஜய்சேதுபதி மூலமாக எடுக்கிறார் அரவிந்த்சாமி. அதில் ஒன்றாக சிம்புவின் காதலி மர்மநபர்களால் கொல்லப்படுகிறார். இன்னொரு பக்கம் அருண்விஜய்யின் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிநாட்டில் போலீசில் சிக்கவைக்கப்படுகிறார்.
அதையும் மீறி சென்னையில் காலடி எடுத்து வைக்கும் சிம்பு, அருண் விஜய் இருவரும் அரவிந்த்சாமியின் துரோகத்துக்கு பழிதீர்க்க வெறியாக அலைகிறார்கள்.. தந்தையின் ஆட்களை தங்களுக்கு விசுவாசமாக்கி அரவிந்தசாமியை தனியாள் ஆக்குகிறார்கள். அவருக்கு உதவும் விஜய்சேதுபதியை தங்கள் பக்கம் இழுத்து அரவிந்தசாமியை கார்னர் பண்ணுகிறார்கள்.. இந்த வாரிசு யுத்தத்தின் முடிவு தான் என்ன..? வாரிசுகள் நினைத்தபடியே அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்ததா என்பது மீதிக்கதை.
கதையின் நாயகன் இவர்தான் என சொல்ல முடியாதபடி அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரவர் கிடைத்த கேப்பில் கெடா வெட்ட முயற்சிக்கின்றனர். தலைமை பொறுப்பை கைப்பற்ற முயற்சிக்கும் சல்லித்தனம் அத்தனையையும் தனது கேரக்டராக மாற்றி நடித்திருக்கிறார் அரவிந்த்சாமி.. கம்பீரமாக கர்ஜிக்கும் அவரது நிலை கடைசியில் உச் கொட்ட வைக்கிறது.
அப்பாவிடம் கெத்து, அம்மாவிடம் பாசம், காதலியிடம் கறார் காதல், அண்ணனிடம் ஆவேசம் என கலவையான ஒரு கதாபாத்திரமாக இதில் ஹைடெக் அட்ராசிட்டி பண்ணியிருக்கிறார் சிம்பு. தந்தைக்குப்பின் அந்த இடத்தை அடைவதற்கு அருண்விஜய்யிடம் தான் எவ்வளவு ஆவேசம்.., மிகச்சிறப்பாக அதை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவர்கள் மூவரிடமும் இருந்து மாறுபட்ட, அலட்டல் இல்லாத போலீஸ் அதிகாரி, ரவுடியின் நண்பன் என விஜய்சேதுபதியின் பரிமாணமும் நமக்கு புதுசு தான். அதேசமயம் அவரது கதாபாத்திரம் இன்னதென கடைசி வரை யூகிக்க முடியாதபடி நகர்த்தி சென்றிருக்கிறார்கள்.
அரவிந்த்சாமியின் மனைவியாக அவரை திருத்த முயன்று முடியாமல் போய், அதேசமயம் அவரது உயிரை காப்பாற்ற பிரயத்தனம் காட்டும் சராசரி இல்லத்தரசியாக ஜோதிகா நிறைவான நடிப்பு. அருண்விஜய்க்கு வாழ்க்கைப்பட்டு அவதிக்கு ஆளாகி சிறைசென்று பரிதாபம் அள்ளுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சிம்புவின் காதலியாக சில்லென ரொமான்ஸ் பண்ணி, பரிதாபமான முடிவை தேடிக்கொள்ளும் டயானா எரப்பா கதாபாத்திரத்திற்கேற்ற பொருத்தமான தேர்வு. அதிதிராவ் ஹைதாரியின் கதாபாத்திரம் மனதில் ஒட்டவில்லை.
பெரியவராக, தாதாயிசம் காட்டாத தாதாவாக பிரகாஷ்ராஜ். தாதாவின் மனைவியாக ஜெயசுதா இருவரும் மகன்களின் வாரிசு சண்டை கண்டு புழுங்கும் இயல்பான பெற்றோர்களாகவே நம் கண்களுக்கு தெரிகிறார்கள். சின்ன தாதாவாக தியாகராஜன்.. கோபத்தைகூட ரொம்ப சாப்ட்டாக காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார். அட.. மன்சூர் அலிகான் இவ்வளவு அமைதியாக கூட பேசுவாரா என்ன..?
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் சலனம் ஏற்படுத்தாமல் கடந்து போனாலும் பின்னணி இசை தடதடக்க வைக்கிறது. சேசிங் காட்சி, குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சி என ஒரு பரபர மூடிலேயே நம்மை வைத்திருக்கிறது சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு.
கேங்ஸ்டர் சண்டை என எதிர்பார்த்து போனால் கேங்ஸ்டர் குடும்பத்துக்குள் நடக்கும் சண்டை என ஒரு ஷாக் கொடுக்கிறார்கள்.. ஆனாலும் அதற்குள்ளும் அதிரடி கலாட்டா, உள்குத்து, என களேபரப்படுத்தவே செய்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.. ஹைடெக் காட்சி அமைப்புகளால் டெக்னாலஜி அப்டேட்டாக அவர் இருந்தாலும் இன்னும் பழைய விஷயங்களில் இருந்து வெளியே வராமல் பிடிவாதம் காட்டுவது மெதுவாக நகரும் முதல்பாதி திரைக்கதை அமைப்பில் நன்றாகவே தெரிகிறது.. சிம்பு க்ளைமாக்சில் செய்வதை ஏன் முதலிலேயே செய்யவில்லை என்கிற மிகப்பெரிய கேள்விக்கு விடையில்லை.