இவர்கள் பிரச்சனைக்கு விஷாலை குறைகூறுவதில் என்ன பயன்..?


ஆர்.கே.சுரேஷ் நடித்த பில்லா பாண்டி படம் தீபாவளிக்கும், உதயா நடித்த உத்தரவு மகாராஜா படம் கடந்த வாரமும் வெளிவந்தது. இந்தநிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து உதயா, ஆர்.கே.சுரேஷ் இருவரும் விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரித்ததில், அவர்கள் இருவருமே அவர்களது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாகச் சொல்கிறார்கள்

ஆனாலும் தங்களது படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம், அதிகமான தியேட்டர்களைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி இவர்கள் விலகியுள்ளதாகவே கூறப்படுகிறது இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லாததால் படங்கள் குறிப்பிட்ட வசூலைக் கூட பெற முடியவில்லை. இருப்பினும் சங்கத்தின் சார்பாக தியேட்டர்காரர்களிடம் பேசி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இருவருக்குமே வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் நிதிப்பிரச்சினையில் தவித்த உதயாவிற்கு ஒன்றரை கோடி ரூபாய் வரையில் பேச்சு வார்த்தை மூலம் சரி செய்ய உதவியிருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தைக் குறை கூறி விலகியுள்ளார்கள் என சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தை மதிக்காமல் திமிரு புடிச்சவன் படம் வெளியானதால் தான் உதயா நடித்த உத்தரவு மகாராஜா படத்திற்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என உதயா குற்றம் சாட்டுகிறாராம். ஆர்.கே.சுரேஷ் நடித்த பில்லா பாண்டியோ தானாகவே வலியச்சென்று சர்கார் போட்டியில் சிக்கிக் கொண்டது.

இந்த இரண்டு படமும் ஓரளவுக்கு நன்றாக இருந்திருந்தால் கூட தாக்குப்பிடித்திருக்கலாமோ என்னவோ..? இதில் விஷாலை குறை சொல்லி என்ன பிரயோஜனம் என்றே தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள மற்றவர்கள் கேட்கின்றனர்.