விஜய் சேதுபதி படங்கள் என்றாலே தானாகவே ரசிகர்களுக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டு விடுவது வாடிக்கையாகிவிட்டது அந்தவகையில் இந்த சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதியின் வயதான தோற்றத்தை பார்த்த பிறகு இது ஏதோ இன்னும் புது மாதிரியான படம் என அந்த ஆர்வம் இரு மடங்காகி விட்டது உண்மை அந்த ஆர்வத்திற்கு தீனி போட்டு இருக்கிறார்களா பார்க்கலாம்
நாடக கலைஞர்கள் பற்றிய கதை நாடகக் கலைஞர்கள் சினிமாவில் நுழைந்து அதனுடன் இணைந்து பணியாற்ற அவ்வளவாக விரும்புவதில்லை ஏன் என்கிற காரணத்தை இந்தப்படம் அழகாக எடுத்துரைக்கிறது குறிப்பாக நடிப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாத விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் நீண்ட நாளைக்கு நம் மனதில் நிற்கும் அந்த அளவுக்கு அவரது நடிப்பிலும் உழைப்பிலும் மெனக்கெடல் தெரிகிறது விஜய் சேதுபதியின் நடிப்பு பயணத்தில் இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல் தான்..
படத்தில் மற்ற கேரக்டர்களில் நடித்துள்ளவர்கள் நம்மை கவனிக்க வைக்கும் விதமாக தங்கள் பங்களிப்பைத் தந்து இருக்கிறார்கள் என்பது இன்னுமொரு ஆச்சரியம் 30 டேக் வாங்கும் ராஜ்குமார் ஆகட்டும், ஐயா இன்னும் என்மேல் வரவே இல்லை அப்புறம் எப்படி நடிப்பு வரும் என அழிச்சாட்டியம் பண்ணும் சுனில் ஆகட்டும் ஒவ்வொரு கேரக்டரையும் பிரமாதப்படுத்துகிறார்கள். நடிகர் பக்ஸ் குறைந்த நேரமே வந்தாலும் தனது தேர்வை நியாயப்படுத்தி இருக்கிறார்
விஜய் சேதுபதிக்கு அடுத்ததாக நம்மை கவர்பவர் புதிதாக அறிமுகமாகியுள்ள சுனில் தான். கிட்டதட்ட நெகட்டிவ் சாயலில் காமெடி கலந்து தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சுனில் தனக்கு நடிப்பு வராது என சொல்லியபடியே அவர் செய்யும் காமெடி அதகளம்.. மௌலி மற்றும் அர்ச்சனா இருவரும் தங்களது அமைதியான நடிப்பால் அழுத்தமான முத்திரை பதித்துள்ளனர்
படம் முழுவதும் அய்யா சீதக்காதி என்கிற அந்த கேரக்டரை இயக்குனர் கொண்டு சென்ற விதம் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் புதிது.. விஜய்சேதுபதி படத்தை பார்க்க ஆவலுடன் வரும் ரசிகர்களுக்கு அவர்களே எதிர்பாராத ஒரு புதுவிதமான விருந்தளித்து வரவேற்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.