கடாரம் கொண்டான் – விமர்சனம்


கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. நடிகர் விக்ரம், நாசர் மகன் அபி ஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இப்படம் ஆக்ஷ்ன் திரில்லர் திரைப்படமாக அமைந்திருக்கிறது.

வெளிநாட்டில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான கேகே(விக்ரம்) கிரைம் பிரான்ச் போலீஸ் குழுவால் துரத்தப்படுகிறார். அதில் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். அந்த மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்க்கும் அபியின் மனைவி அக்சராவை கடத்தி வைத்துக்கொண்டு அபிஹாசன் மூலமாக விக்ரமை வெளியில் கொண்டுவர சிலர் முயல்கிறார்கள். விக்ரம் யார்? அவரை கொல்ல முயற்சிப்பது யார்? அபி ஹாசனும், அக்‌ஷராவும் என்ன ஆனார்கள்? என்பதே மீதிக்கதை

விக்ரம் அசத்தலாக நடித்துள்ளார் . சின்னச் சின்ன அசைவுகள் பார்வைகள் அந்த உடல் மொழிகள் அபாரம் . ஆனால் நடிப்பில் சற்றே கமல்ஹாசன் பாணி தெரிகிறது .

பெரிய கண்கள் , குறுகுறு சிரிப்பு , குழந்தைத்தனமான முகம் , முயன்று தமிழை சரியாக பேசும் சிரத்தை என்று அக்ஷரா கவர்கிறார் அபி ஹாசன் ஒகே. ஜிப்ரனின் இசை , ஸ்ரீனிவாஸ் குதாவின் ஒளிப்பதிவு , பிரவீன் கே எல் எடிட்டிங் , ஆகியவை சிறப்பு .

படத்தின் முதல் காட்சியிலேயே பரபரப்பு ஆரம்பித்து விடுகிறது. ராஜேஷ் எம் செல்வா .மேக்கிங்கில் சிறப்பாக செய்து இருக்கிறார் . மலேசிய இரட்டை கோபுரத்தை ஒரே ஷாட்டில் அணு அணுவாக அணுகி சட்டென்று அதில் இருந்து விக்ரம் குதிக்கும் காட்சி மேக்கிங் சிறப்புக்கு உதாரணம்.

படத்தை தமிழுக்கு மாற்றியதில் அதன் பின்னணியை மலேசியாவுக்கு மாற்றியது நல்ல ஐடியா.. ஆனால், படத்தில் பல இடங்களில் லாஜிக் சொதப்பல்கள். ஊர் முழுவதும் தேடப்படும் குற்றவாளி போலீஸ் நிலையத்திற்குள் சாதரணமாக நுழைவது எப்படி? விக்ரம் உண்மையில் யார்? அவர் என்ன தான் செய்கிறார்? பயணமே செய்யக்கூடாத கர்ப்பிணி 10 நாட்கள் முன் தான் மலேசியா வந்திருக்கிறார் எப்படி? என பல கேள்விகளுக்கு படத்தில் விடையில்லை. கேரக்டர்களின் பின்னணி சரியாக தெளிவுபடுத்தப்படவில்லை. திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .