மிக மிக அவசரம் – விமர்சனம்


முக்கூட்டு திருவிழா பவானி ஆற்றங்கரையில் நடைபெறுகிறது. அங்கு நடைபெறும் விழாவிற்கு வெளிநாட்டில் இருந்து ஒரு மந்திரி வருகிறார். அதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் நிறுத்தப்படுகின்றனர். அதில் பெண் காவலரான படத்தின் நாயகி ஸ்ரீபிரியங்காவும் நிறுத்தப்படுகிறார்.

அவரை எப்படியாவது அடையத் துடிக்கிறார் இன்ஸ்பெக்டரான முத்துராமன். ஆனால் அவரை அடைய முடியாததால் அவரை பழிவாங்க ஸ்ரீபிரியங்காவை ஒரு பாலத்தின் நடுவில் நிறுத்தி விடுகிறார் இன்ஸ்பெக்டரான முத்துராமன்.

அவரை சிறிய ஓய்வு கூட எடுக்க விடாமல் பழிவாங்குகிறார் இன்ஸ்பெக்டர் முத்துராமன். நேரம் ஆக ஆக ஸ்ரீபிரியங்காவிற்கு சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

ஆனால் இன்ஸ்பெக்டர் முத்துராமனின் பழிவாங்கும் நடவடிக்கையால் சிறுநீர் கூட கழிக்க இயலாமல் கடும் உடல் உபாதைக்கு ஆளாகிறார் நாயகி ஸ்ரீபிரியங்கா. உடன் பணிபுரியும் காவலர்களான ஈ.ராம்தாஸ், வீகே.சுந்தர், சரவண சக்தி ஆகியோராலும் அவருக்கு உதவ இயலாத நிலையில் ஸ்ரீபிரியங்கா என்ன ஆகிறார் என்பதே படத்தின் கதை.

சமூகத்தில் இயல்பாக நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து வரும் சில படங்களில் இந்த மிக மிக அவசரமும் ஒன்று. பெண் காவலர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் காமாட்சி.

நாயகி ஸ்ரீபிரியங்கா தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். நேரம் ஆக ஆக அவரது அவஸ்தைகளை தன்னுடைய நடிப்பால் பிரதிபலிக்கிறார். கிளைமாக்சில் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறார்.

முத்துராமன் தனது பார்வையாலேயே வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார். ஸ்ரீபிரியங்காவை அடைய வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் சதி செயல்கள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.

ஈ.ராம்தாஸ் படத்திற்கு காமெடி பஞ்சத்தை போக்கி இருக்கிறார். இவரது பன்ச் வசனங்களால் படம் ஆங்காங்கே கலகலப்பாக செல்கிறது. இன்னொரு போலிஸாக நடித்திருக்கும் சரவண சக்தியும் சிரிக்க வைக்கிறார்.
டிரைவராக வரும் வீ.கே.சுந்தர் தனது நடிப்பால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார். சக போலீசுக்கே உதவ முடியாத நிலையை மூவருமே இயல்பாக பிரதிபலிக்கிறார்கள்.

ஸ்ரீ பிரியங்காவின் காதலராக வரும் நாயகன் ஹரிஷ் குமாரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். காதலிக்காக ஆம்புலன்சை எடுக்க முயற்சிக்கும்போது வேலை தடுக்கவே கடமைக்கு முக்கியத்துவம் தரும் இடத்தில் ரசிகர்களின் மனதை நெகிழ வைக்கிறார். சீமான் தனது கம்பீரமான நடிப்பால் மிளிர்கிறார்.

இஷானின் இசை படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.

இனிமேல் சாலைகளில் பாதுகாப்பிற்காக நிற்கும் காவலர்களை கடக்கும் போது நிச்சயம் நமது மனம் ஒரு நொடியாவது அவர்களின் அவஸ்தைகளை நினத்து்ப் பார்க்கும். இதுவே இந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றி.