சவாரி – விமர்சனம்


புதியவரான குகன் சென்னியப்பன் இயக்கத்தில் முழுக்க முழுக்க புது முகங்கள் நடித்து வெளிவந்துள்ள படம் தான் சவாரி.

ஆந்திரா மற்றும் தமிழக எல்லை பகுதியில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து சைக்கோ ஒருவனால் பலர் கொல்லப்படுகின்றனர். இந்த கொலைகளை கண்டுப்பிடிக்க போலீஸ் அதிகாரி பெனிட்டோ நியமிக்கப்படுகிறார். தன் திருமணத்திற்காக பெனிட்டோ ஆந்திரா செல்லும் வழியில் அவரது கார் பழுதாகின்றது.

இதை தொடர்ந்து அந்த வழியாக செல்லும் எம்.எல்.ஏ ஒருவரின் காரில், அதை ஓட்டிவரும் மெக்கானிக் ட்ரைவரான கார்த்திக் யோகியிடம் லிப்ட் கேட்டு பெனிட்டோ பயணிக்க, அந்த கொலைக்கார சைக்கோவும் அதே காரில் லிப்ட் கேட்டு ஏறுகிறான். இதை தொடர்ந்து இவர்கள் பயணத்தில் என்ன ஆனது? என்பதை சுவாரசியமாக கூறப்பட்டுள்ளது.

போலிஸ் அதிகாரியாக வரும் பெனிட்டோ ஒரு நிஜ போலிஸாகவே காட்சி தருகிறார். நாயகியாக நடித்திருக்கும் சனம் ஷெட்டி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மெக்கானிக் டிரைவராக வரும் கார்த்திக் யோகி நடிப்பில் நம் கவனம் ஈர்க்கிறார். எம்.எல்.ஏவாக வரும் அருண், சைக்கோவாக வரும் மதிவாணன் ராஜேந்திரன் என அனைவரும் மிகையில்லாத ஒரு நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவு தான்.. அவ்வளவு அட்டகாசமான ஒளிப்பதிவினை நிகழ்த்தியிருக்கிறார் செழியன்.. காட்டுப் பகுதியினை அவ்வளவு பயங்கரமாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார். இவை அனைத்தையும் விட விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை மிரட்டியுள்ளது.

அந்த சைக்கோ கொலைகாரன், போலீஸான பெனிட்டோ காரில் ஏறிய அடுத்த நிமிடம் பதட்டம் நம்மை தொற்றிக்கொள்கிறது. ஆனால் இரண்டாம் பாதி நீளமாக இருப்பதால், அதனாலேயே முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது. க்ளைமேக்ஸில் சுவாரசியம் இல்லாததும் குறை தான். நல்ல க்ரைம், த்ரில்லரை விரும்புவர்கள் கண்டிப்பாக ஒரு முறை சவாரி போகலாம்.