7 பேர் விடுதலை வழக்கு…செந்தமிழன் சீமான் அறிக்கை!

சி.பி.ஐ. விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற நபர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கான போராட்டம் ஒவ்வொரு முறையும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாகவே தொடர்ந்து வருகிறது. ஆயுள் தண்டனை பெற்று 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைபட்டுக் கிடக்கும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தத்து தலைமையில், நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், யு.யு.லலித், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 7 பேர் விடுதலையை வலியுறுத்தியும் தமிழக மக்களின் உணர்வுகளை எடுத்துச் சொல்லியும் தமிழக அரசு வாதாடி வரும் நிலையில், ”சி.பி.ஐ. விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறைகளில் உள்ள நபர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம். அதேபோல், கடுங்குற்றம் செய்யாமல் ஆயுள் தண்டனை பெற்ற நபர்களை விடுப்பது குறித்தும் மாநில அரசு முடிவு எடுக்கலாம். மத்திய அரசின் ஆலோசனை தேவைப்படாத வழக்குகளிலும் கைதிகளை விடுவிக்கலாம்.” எனச் சொன்ன நீதிபதிகள் கூடுதலாக ”ஆயுள் சிறை என்பது ஆயுள் முழுவதும் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அவர்களை மாநில அரசு விடுதலை செய்ய முடியாது. மேலும், 25 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகளையும் விடுக்க முடியாது” என்றும் உத்தரவிட்டுள்ள‌னர்.

அந்த வகையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தமிழக அரசு தலையிட முடியாத இக்கட்டு ஏற்பட்டிருக்கிறது. 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிப்பதற்கான உரிமை மத்திய அரசுக்கா, மாநில அரசுக்கா எனப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்காமல் மனசாட்சியின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சிறு வயதிலேயே சிறைக்குப் போய் இளமையையும் வாழ்வையும் தொலைத்துவிட்டு அல்லாடும் 7 பேரின் வேதனையை நீதிபதிகள் கருணையோடு கவனிக்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கு விசாரணையின் குளறுபடிகளையும் ஜோடிப்புகளையும் மதிப்பிற்குரிய கிருஷ்ணய்யர் உள்ளிட்ட எத்தனையோ பேர் பகிரங்கப்படுத்திவிட்ட பிறகும், அப்பாவிகள் மீதான தண்டனை தொடருவது வேதனையானது. சிறையில் தவிப்பவர்களின் மனநிலையையும் தமிழக மக்களின் உணர்வுகளையும் மனதில் கொண்டுதான் தமிழக அரசு 7 பேரின் விடுதலைக்காக குரல் எழுப்பி வருகிறது. ஒரு மாநிலத்தின் குரலாக ஒலிக்கும் உணர்வை, மத்திய அரசு உடனடியாகக் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும். பேரறிவாளனைக் காப்பாற்றத் துடிக்கும் தாய் அற்புதத்தம்மாளின் கண்ணீரையும் துயரையும் கருணையோடு நோக்கி, 7 பேரின் விடுதலைக்கு மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

நீதித்துறையும் மத்திய மாநில அரசுகளும் இந்த வழக்கைச் சிறப்பு வழக்காகக் கவனித்து, மனசாட்சியுடன் கலந்தாலோசித்து 7 பேருக்கான விடுதலையை உடனடியாகச் சாத்தியப்படுத்த வேண்டும். ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுகளை இனியும் புறந்தள்ளாது உரிய தீர்வுக்கு அனைவரும் வழிவகுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.