இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றி உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் இது. அந்தவகையில் சிவகார்த்திகேயன் முதன் முதலாக ஒரு உண்மை கதையில் நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) என்ற இளைஞர், ராணுவத்தில் சேர்ந்து படிப்படியாக பெரிய பொறுப்புகளை அடைந்து காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார். இன்னொரு பக்கம் தனது நீண்டநாள் காதலியான இந்துவையும் (சாய் பல்லவி) பலத்தா எதிர்ப்புகளுக்கு இடையே அவரது பெற்றோரை சமாதானம் செய்து திருமணம் செய்து கொள்கிறார். இருவருக்கும் இடையேயான காதல் வாழ்க்கை, இன்னொரு பக்கம் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான முகுந்தின் அதிரடிகள், இறுதியில் நாட்டைக் காக்க வீரமரணம். இதுதான் ‘அமரன்’ படத்தின் கதை
முகுந்த்வரதராஜன் வேடமேற்றிருக்கும் சிவகார்த்திகேயன்,அதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்.உடல் எடை மற்றும் தோற்றப் பொலிவு மற்றும் வகிக்கும் பதவிக்கேற்ற மிடுக்கு ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார் .
ஹீரோவை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் சாய் பல்லவிக்கு. இந்து கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சாய்பல்லவி. அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி.. அட அடா.. இவரது நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருதை எதிர்பார்க்கலாம்.
இராணுவக்காட்சிகளில் புவன் அரோரா,ராகுல் போஸ் ஆகியோரும் குடும்பக்காட்சிகளில் கீதா கைலாசம்,ஷ்யாம் பிரசாத் ராஜகோபால் உள்ளிட்டு படத்தில் இருக்கும் நடிகர்கள் பொறுப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தில் இன்னொரு கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு தனது இசையால் புகுந்து விளையாடி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். அதேபோல ஒளிப்பதிவாளர் சதீஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் ரம்மியமாகவும் ஆக்சன் காட்சிகளில் அதிரடியாகவும் நம் மூடுக்கு தகுந்தாற்போல் மாறுகிறது. சண்டைக் காட்சிகளில் அதகளம் பண்ணியிருக்கிறார்கள் அன்பறிவு மாஸ்டர்கள்.
ஒரு பயோபிக்கை கையில் எடுத்துக் கொண்டு அதில் வெற்றி பெறவேண்டும் என்றால் அதற்கு ரசிகர்களை கட்டிப் போடும் திரைக்கதையால் மட்டுமே முடியும். அந்த வகையில் தான் எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கு நியாயம் செய்யும் ஒரு நேர்த்தியான திரைக்கதையுடன் களமிறங்கி இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. அந்தவகையில் மொத்தத்தில் இந்த படத்தை எல்லோருக்கும் பிடித்த ஒரு படமாகவும், தேசப்பற்றை உணரவைக்கும் படமாகவும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.