அங்காரகன் ; விமர்சனம்


ஊட்டி மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றில் ஒரு கணவன் மனைவி ஜோடி, சில நண்பர்கள் என தேடி வந்து தங்கி இயற்கை அழகை அனுபவிக்கின்றனர். அப்படி வந்தவர்களில் ஒரு பெண் திடீரென மாயமாக மறைகிறார். இதனை விசாரிப்பதற்காக அந்தப்பகுதி போலீஸ் அதிகாரி சத்யராஜ் அங்கே வருகிறார்.

விசாரணையின்போது பல புதுப்புது தகவல்கள் கிடைக்கின்றன. அது மட்டுமல்ல சில அமானுஷ்ய நிகழ்வுகளும் நடக்கின்றது. காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்தார்களா ? அமானுஷ்ய நிகழ்வுகளின் பின்னணி காரணம் என்ன ? இதில் சத்யராஜின் சொல்லப்படாத இன்னொரு பக்கம் என்ன என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது.

மொட்டை தலையுடன் நீண்ட நாளைக்கு பிறகு சத்யராஜின் கெட்டப்பே படத்தைப் பார்க்க உற்சாகப்படுத்துகிறது. ஒவ்வொருவரையும் அவர் விசாரிக்கும் பாணி, அதில் வெளிப்படும் அவரது வழக்கமான நக்கல் நையாண்டி என வழக்கம்போல தனது ஃபார்முக்கு திரும்பி உள்ளார் சத்யராஜ்.

நாயகன் ஸ்ரீபதி வழக்கமான பாணியில் இருந்து விலகி சற்று வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளார். நாயகி நியா, அங்காடித் தெரு மகேஷ், அப்புக்குட்டி, , ரெய்னா காரத், சோஃபி ஆண்டனி என படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் தங்களது இருப்பை ரசிகர்களுக்கு உணர்த்த ஏதோ ஒரு வகையில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். சில விஷயங்கள் காமெடியாக இருக்கிறது சில விஷயங்களை ஜீரணிக்கவே முடியவில்லை.

படத்தின் இரண்டாம் பாதி வரை காணாமல் போன ஒரு இளம் பெண்ணை தேடுகிறார்கள் என்பது மட்டுமே கதையாக நகர்ந்தாலும் திடீரென ஹாரர் மூடுக்கு மாறி அதிர்ச்சி அளிக்கவும் முயற்சித்து இருக்கிறார்கள். இதன் பின்னணியில் சொல்லப்படும் 1900 காலகட்டத்தில் நடந்த ஒரு ராணியின் கதை. பிரிட்டிஷ் இந்தியாவின் காலகட்டத்தில் மூன்று மலை கிராமங்கள் மட்டும் அதிகாரத்தில் இருக்கும் ராணியை எதிர்க்க, அவர்களின் கொட்டத்தை அடக்க ராணி படையை அனுப்பும் காட்சி ஆகியவை சற்று வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கிறது.

அதே சமயம் கிளைமாக்ஸில் அதை சரியாக இணைத்து இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும். இருந்தாலும் கோடை காலத்தில் நாமே இப்படி ஒரு குளுகுளு ரிசார்ட்டுக்கு சென்று வாண்ட்டாக பிரச்சினையில் சிக்கியது போன்ற ஒரு அனுபவத்தை படம் முழுவதும் வழங்கியுள்ளார் இயக்குனர் மோகன் தாச்சு. திரில் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த அங்காரகன் ஓரளவு திருப்தி தருவான் என்று சொல்லலாம்.