ஸ்ட்ரைக்கர் ; விமர்சனம்


வழக்கமாக ஹாரர் படங்கள் நிறைய வருகின்றன. அவற்றிலிருந்து சற்று வித்தியாசமான கோணத்தில் யோசித்து இந்த ஸ்ட்ரைக்கர் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்

ஓஜா போர்டு மூலமாக ஆவி இருக்கிறதா என்பதை கண்டறிவதுடன் அவர்களுடன் பேசவும் முயற்சி எடுத்து வருபவர் ஜஸ்டின் விஜய். அவரது தோழியான வித்யா பிரதீப்புக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அப்படி ஒருமுறை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் ஆவி நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைக்க அதை உறுதிப்படுத்துவதற்காக அங்கே செல்கிறார் ஜஸ்டின் விஜய்.

அவரே எதிர்பாராமல் அங்கே வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார் வித்யா பிரதீப். இந்தமுறை அவருக்கு ஆவி இருப்பது குறித்து நம்பிக்கை ஏற்படுத்தி நிரூபித்து காட்ட வேண்டும் என நினைத்து அதற்கான ஏற்பாடுகளை அங்கே செய்கிறார் ஜஸ்டின் விஜய். கொஞ்ச நேரம் கழித்து அந்த வீட்டின் உரிமையாளரான இறந்துபோன ராபர்ட்டுடன் பேச முயற்சிக்கும் போது அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கத் துவங்குகின்றன. இவர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேறாமல் செய்கின்றன.

இதைத்தாண்டி ஜஸ்டின் விஜய் ராபர்ட்டுடன் பேசினாரா ? அங்கு நடக்கும் நிகழ்வுகளில் இருந்து தப்பித்து இவர்களால் வெளியேற முடிந்ததா ? இல்லை அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு இவர்கள் பலியானார்களா ? இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

ஆவி இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிவதற்காக ஈசிஆரில் உள்ள அந்த பங்களாவிற்குள் நுழைவதில் இருந்து கதை சூடு பிடிக்கிறது. ஆவி ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்திற்கு ஜஸ்டின் விஜய் ரொம்பவே பொருத்தமானவராக இருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் பயத்துடன் ஆவியை அணுகும் முயற்சியை மேற்கொண்டாலும் அதைத்தொடர்ந்து ஏற்படும் அமானுஷ்ய நிகழ்வுகளில் ஓரளவுக்கு துணிச்சலுடன் சமாளிக்கும்போது தனது கதாபாத்திரத்தை வலுவாக தூக்கிப் பிடிக்கிறார்.

நல்ல அனுபவம் உள்ள நடிகை என்பதை ஒவ்வொரு காட்சியிலும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் வித்யா பிரதீப். குறிப்பாக அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு ஆட்பட்டு அவர் சித்திரவதைக்கு ஆளாகும் காட்சிகளில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேசமயம் ஃப்ளாஷ்பேக் காட்சிகளையும் அதை தொடர்ந்து வரும் கிளைமாக்ஸ் காட்சியையும் பார்த்த பின்னர் அவர் மீது கோபமோ வருத்தமோ ஏற்படுவதற்கு பதிலாக அவர் செய்தது சரிதான் என்பது போல நியாயத்தை உணர முடிகிறது.

கொஞ்ச நேரமே வந்தாலும் ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய வேலையை சரியாக செய்திருக்கிறார். விஜய் சித்தாத்தின் பின்னணி இசை திகிலூட்டுகிறது. அதேபோல ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளேயே தான் தனது வேலையை செய்தாக வேண்டும் என்றாலும் ஒளிப்பதிவாளர் மனிஷ் மூர்த்தி அதிலும் தன் திறமையை திறம்பட காட்டியுள்ளார்.

சிம்பிளான கதை, அதற்குள் ஒரு ட்விஸ்ட், சில பயமுறுத்தும் நிகழ்வுகள், பெரும்பாலும் ஒரே லொகேஷன் என ஒரு சின்ன பட்ஜெட்டிற்குள் ஒரு திருப்தியை ரசிகர்களுக்கு தர முயற்சித்து ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார் அறிமுக இயக்குனர் எஸ்,ஏ பிரபு.