வெப்பம் குளிர் மழை ; விமர்சனம்


திருமணம் ஆகி 5 வருடம் ஆகியும் கதாநாயகிக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால் கணவனின் அக்கா தனது 15 வயது மகளை தம்பிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி எடுக்கிறார். பேரக்குழந்தை வேண்டும் என்பதற்காக மாமியாரும் அதே முடிவை எடுக்க குழந்தை பிறக்காததால் ஒரு பெண்ணுக்கு சமுதாயத்தில் இருந்து மட்டுமின்றி குடும்பத்திலும் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படும் என்பது தான் இந்த படத்தின் கதையாக உள்ளது.

இந்த படத்தின் நாயகன் திரவ் அனைத்து உணர்வுகளையும் தனது ஆழமான நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் திரவுக்கு இது தான் முதல் படம் என்றால் நிச்சயம் நம்ப மாட்டார்கள், அந்த அளவுக்கு சிறப்பாக நடித்து பெத்தபெருமாள் என்ற கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் எளிதியில் கடத்தி விடுகிறார்

நாயகி இஸ்மத் பானு பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு தனது இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

’என் உயிர் தோழன்’ என்ற படத்தில் பார்த்த ரமா இந்த படத்தில் மாமியார் அவதாரம் எடுத்து உள்ளார். திருமணமான ஆரம்பத்தில் அவர் காட்டும் பாசம், குழந்தை பிறக்கவில்லை என்று தெரிந்தவுடன் அவர் காட்டும் கொடூரம் வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரனின் எளிமையான ஒளிப்பதிவு, எளிமையான கிராமத்தை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஒரு கிராமத்துக்குள் பயணித்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கிறது.

சங்கர் இசையில், திரவின் வரிகளில் பாடல்கள் அனைத்திலும் கிராமத்து வாசம் வீசுவதோடு, புரியும்படியும், திரும்ப திரும்ப கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதையோட்டத்திற்கு உயிரோட்டம் அளித்திருக்கிறது.

இன்றும் பாரம்பரிய கலாச்சாரமும், பண்பாடும் கெடாமல் இருக்கும் தமிழக கிராமிய பகுதிகளில் செயன்முறை கருத்தரிப்பின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் இடையேயான உறவினை விவரிக்க முயன்றிருக்கிறது ‘வெப்பம் குளிர் மழை’. குழந்தையின்மை என்ற பிரச்சினைக்கு பெண்கள் மட்டும் காரணம் அல்ல என்றும் ஆண்களும் காரணமாக இருக்கலாம் என்றும் திரைக்கதையில் போகிற போது எதார்த்தமாக கூறி இருப்பது இயக்குனரின் பிளஸ் பாயிண்ட். மொத்தத்தில் ஒரு புதிய முயற்சியை கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் தான் ’வெப்பம் மழை குளிர் மழை’ படம் சொல்லும் பாடமாகும்.