சமீபகாலமாக ஹாரர் படங்களின் வருகை குறைந்திருந்த நிலையில் அந்த குறையை போக்கும் விதமாக வெளியாகி உள்ள படம் தான் இந்த ‘டீமன்’. ஹாரர் படம் என்றாலும் கூட அதை சற்றே வித்தியாசமான கோணத்தில் சைக்கலாஜிக்கலாக அணுகி இருக்கிறார்கள்.
உதவி இயக்குனராக சினிமாவில் வாய்ப்பு தேடும் சச்சினுக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதை தொடர்ந்து புதிய பிளாட் ஒன்றுக்கு குடியேறுகிறார் சச்சின். அந்த வீட்டில் தொடர்ந்து சில நாட்கள் அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார் சச்சின். இதைத்தொடர்ந்து அவர் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றாலும் கூட இந்த நிகழ்வுகள் தொடர்கின்றன.
இது ஏன் எப்படி என்கிற ஆராய்ச்சியில் இறங்க சச்சினுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் பெரிய வருகின்றன. இதை அடுத்து சச்சின் இந்த விஷயங்களை எப்படி டீல் செய்தார் ? இந்த மன அழுத்தத்தில் இருந்து அவரால் வெளியே வர முடிந்ததா என்பது மீதிக்கதை.
பொதுவாகவே ஹாரர் படங்கள் என்றால் பேய் பயமுறுத்தல், அவற்றின் தொந்தரவு என பெரும்பாலும் உடல் ரீதியாக சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்கள் பிரச்சனைகளை சந்திப்பதாக தான் காட்டுவார்கள். இந்த படத்தில் சற்றே வித்தியாசமாக படத்தின் நாயகன் இது போன்ற அமானுஷ்ய நிகழ்வுகளால் மனரீதியாக பாதிக்கப்படுவதை காட்டி இருப்பது கொஞ்சம் வித்தியாசமானது தான்.
அந்த கதாபாத்திரத்தில் நடிகர் சச்சின் அந்த உணர்வுகளை திரும்ப பெற வெளிப்படுத்தி உள்ளார். கிட்டத்தட்ட படத்தில் இருக்கும் அத்தனை கதாபாத்திரங்களை விட இவரை தான் அதிக நேரம் திரையில் பார்க்கிறோம் என்பதால் தனக்குள்ள கூடுதல் பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளார். இருந்தாலும் துறுதுறுப்பான இளைஞராக அவரை பார்த்துவிட்டு பின்னால் பேய் பிசாசுக்கு பயப்படும் நபராக பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.
கதாநாயகியாக அபர்னதி இந்த படத்தில் அவருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் வரும் காட்சிகளில் நிறைவாக செய்து விட்டுப் போகிறார். கும்கி அஸ்வின் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் இருந்தாலும் நம் அனைவரையும் அனைவரையும் அவர்களால் முழுதாக திருப்தி படுத்த முடியவில்லை என்பதே உண்மை.
இது போன்ற ஹாரர் படங்களுக்கு ஒளிப்பதிவு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து தனது கேமராவாலும் பயமுறுத்தலான காட்சிகளை தந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ் ஆனந்தகுமார். அதேபோன்று திகில் காட்சிகளுக்கும் வீட்டிற்குள் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளுக்கும் இன்னும் அதிக டெரர் ஏத்தும் விதமாக இசையமைப்பாளர் ரேணி ரபேல் தன் பங்கிற்கு விளையாடி இருக்கிறார்..
காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு இருந்தால் தான் பேய் படம் என்பது ரசிகர்களை தக்க வைக்கும். இதை படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து தான் இயக்குனர் ரமேஷ் பழனிவேல் உணர்ந்து இருப்பார் போல தெரிகிறது. ஆரம்பத்திலிருந்து இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் இந்த டீமன் இன்னும் சுவாரசியமானவராக இருந்திருப்பார்