ஆர் யூ ஓகே பேபி ; விமர்சனம்


கல்யாணம் செய்து கொள்ள மறுத்து ஊதாரித்தனமாக ஊர் சுற்றும் காதலன் அசோக்கிடம் தன்னை இழந்து கர்ப்பம் ஆகிறார் முல்லையரசி. நாலு மாத கர்ப்பத்தை கலைக்க முடியாத நிலையில் நர்ஸ் வினோதினியின் ஆலோசனைப்படி குழந்தை பிறந்ததுமே வேறொரு நபருக்கு தத்துக் கொடுத்து விடலாம் என்றும் பிரசவ செலவுகளையும் பார்த்துக் கொண்டு குறிப்பிட்ட பணமும் வாங்கித் தருகிறேன் என்று உத்தரவாதம் அளிக்கிறார்.

அதன்படி குழந்தை பிறந்த பின்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அந்த குழந்தை சமுத்திரக்கனி அபிராமி என்கிற நடுத்தர வயது தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்படுகிறது. குழந்தை இல்லாத ஏக்கம் தீர்க்க வந்த மகாலட்சுமியாக குழந்தையை அவர்கள் வளர்க்கின்றனர்.

இந்த நிலையில் திடீரென தனது காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அவனை தன் வழிக்கு கொண்டுவர வேண்டும் என்றால் தன் குழந்தை தன்னிடம் இருக்கவேண்டும் என திடீரென ஞானோதயம் பெற்ற முல்லையரசி, லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் ‘சொல்லாததும் உண்மை’ நிகழ்ச்சி மூலமாக இந்த விஷயத்தை பூதாகரமாக்குகிறார்.

அதன் பின்னர் இது குழந்தைகள் நல கமிஷன், போலீஸ் நீதிமன்றம் என மிகப் பெரிய வழக்காக மாறுகிறது. தத்தெடுத்த தம்பதிகள் பாசப் போராட்டத்தில் துடிக்கின்றனர். பெற்றெடுத்த தாயாக முல்லையரசியும் தவிக்கிறார். இறுதியில் குழந்தை யாருக்கு சொந்தமானது ? நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கியது ? இதுதான் கிளைமாக்ஸ்.

சமுத்திரக்கனி, அபிராமி தம்பதி குழந்தை வளர்ப்பில் காட்டும் அந்த அக்கறையை பார்க்கும்போது நமக்கே அவ்வளவு பரிதாபம் வருகிறது. அந்த அளவுக்கு ஆதர்ஷமான தம்பதியாக நடித்துள்ளனர். எப்படியாவது இவர்களிடம் குழந்தை சென்று சேர்ந்து விடாதா என்கிற எண்ணத்தையே படம் முழுவதும் நமக்குள் ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

தான் நிஜத்தில் நடத்தி வரும் ரியாலிட்டி ஷோ போலவே இந்த படத்திலும் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தி அதிலும் தன் சொந்த பெயரையே வெளிப்படுத்திக் கொண்டு உள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த ரியாலிட்டி ஷோவுக்காக என்னென்ன விஷயங்களை செய்கிறார்கள் என வெளிப்படையாகவும் அவர் கூறியுள்ளதற்காக அவரை பாராட்டலாம்.

குழந்தையின் தாயாக முல்லையரசியும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் அவரது கதாபாத்திரம் மீது நமக்கு கோபமும் கொஞ்சம் வெறுப்பும்தான் வருகிறதே தவிர பரிதாபம் வரவில்லை. இன்றைய பல இளம்பெண்களின் நிலை இதுதான்.. ஆனால் அதுவே அந்த கதாபாத்திரத்திற்கு, அவரது நடிப்பிற்கு கிடைத்த வெற்றி தான்.

விசாரணை அதிகாரியாக வருபவ,ர் நர்சாக வரும் வினோதினி, முல்லையரசியின் காதலராக வரும் முருகா அசோக், அசோக்கின் தந்தை கிருஷ்ணன், ரியாலிட்டி ஷோவை நடத்தி வரும் பாவல் நவகீதன், வழக்கறிஞர் அனுபமா குமார் என அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் தனது பின்னணி இசையால் கதாபாத்திரங்களை வைத்து பொம்மலாட்டம் நடத்தி இருக்கிறார் இசைஞானி இளையராஜா. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அன்னை தந்தை பாடல் படம் பார்த்து விட்டு வந்த பின்னும் பல நாட்களுக்கு நம்முள் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்

ஆரம்பத்தில் இந்த படம் ரொம்ப சீரியஸாக செல்லுமோ என நினைக்க வைத்து ஆனால் அப்படி இல்லை ஒரு ஜாலியான கலகலப்பான அதேசமயம் உணவுப்பூர்வமாக படமாக இதைக்கொண்டு சென்றிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். பெரும்பாலும் பெற்ற குழந்தைகளை தத்துக் கொடுப்போர் தங்களது வசதியின்மை காரணமாகவே அந்த சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அதே சமயம் அந்த குழந்தையை தத்து எடுப்போர் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் மட்டுமே தத்தெடுக்கின்றனர். இந்த இரண்டு தரப்பினரில் யாருடைய பாசம் அதிகமானது என்பதை அந்த சூழல் தான் தீர்மானிக்கும். குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கலை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த படம் உருவாகியுள்ளது.