அசோக்செல்வன் சென்னையில் இருக்கும் தனது அக்கா வீட்டில் தங்கியிருந்தபடியே சினிமாவில் உதவி இயக்குநர் வேலை செய்து வருகிறார். இந்த நேரத்தில் அசோக் செல்வன் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்யும் அவந்திகா மிஸ்ராவை பார்த்தவுடன் காதலிக்கிறார். அவந்திகாவும் டெல்லிக்குப்போய் வேலை செய்ய வேண்டிய சிச்சுவேஷனைக்கூட கேன்சல் செய்துவிட்டு அசோக்செல்வனைக் காதலிக்கத் துவங்குகிறார்.
இந்த நேரத்தில் அசோக் செல்வனின் பெண் நண்பியின் அபார்ஷனுக்கு அசோக் செல்வன் உதவி செய்யப்போய் இந்தக் குழப்பத்தில் ஏற்படும் பிரச்சனையால் காதலர்கள் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். ஆனாலும் அந்த நண்பியே நேரில் வந்து விளக்கம் சொல்லிய பிறகு காதலர்கள் இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.
ஆனால் அசோக்செல்வனின் தங்கை திருமணத்திற்காக கிராமத்துக்குச் சென்ற நேரத்திலும் மீண்டும் அங்கேயும் ஒரு குழப்பம் ஏற்பட்டு மீண்டும் காதலர்களுக்குள் பிரிவு ஏற்படுகிறது. இப்படியே இவர்களது காதல் முறிவு முடிவில்லா பயணமாக நீண்டு கொண்டே போக, பிரச்சனைகளை முடித்து காதல் முறிவுக்கு நாயகன் அசோக் செல்வன் முற்றுப்புள்ளி வைத்தாரா? இல்லையா என்பதுதான் இந்த ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ திரைப்படத்தின் திரைக்கதை.
வழக்கமான தனது துள்ளல் நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கும் நாயகன் அசோக் செல்வன், காதல் காட்சிகளில் மட்டும் இன்றி காமெடியிலும் கலக்கியிருக்கிறார். நாயகனுக்கு இணையான வேடமாக இருந்தாலும், வழக்கமான கமர்ஷியல் நாயகியாக வலம் வந்திருக்கும் அவந்திகா மிஸ்ரா, காதல், கவர்ச்சி மற்றும் காமெடி ஆகியவற்றில் அசத்துகிறார். அவந்திகா மிஸ்ராவின் அழகு முகம் பார்க்கப் பார்க்கப் பிடிக்கிறது
நாயகனின் அம்மாவாக வரும் ஊர்வசி வழக்கம்போல சிரிப்பை வாரி வழங்குகிறார். நாயகனின் மாமாவாக வரும் படவா கோபி, டாக்டராக வரும் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையில் இளையராஜா இசையையும் தேவைக்கேற்பப் பயன்படுத்தி சிரிக்க வைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு படத்தை மிகப் பெரிய பட்ஜெட் படமோ என்று கேட்க வைத்திருக்கிறது
பல சினிமாக்களில் பார்த்த ஒரு கதையை தான், இந்த படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால்பழைய பாணியிலான காதல் கதை தான் என்றாலும் அதை எந்தவித நெருடலும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி கேசவன்.