சமுதாயப் பயன்பாட்டுக்காக உழைத்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இன்னும் சாதனை விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் வாழ்க்கையைப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் எம்.உதயகுமார்
தூத்துக்குடியில் நடக்கும் கதை. உப்பளத்தில் லைன் மேனாக வேலை பார்ப்பவர் சார்லி. அவர் மகன் நாயகன். உப்பளத்தில் அடிக்கடி மின்சார கசிவு மின்சார பிரச்சனை வர அதற்கு தீர்வு காண சார்லியின் மகன் ஒரு புதுவிதமான கருவியை கண்டுபிடிக்கிறார்.. இதற்கு அரசின் உதவி கேட்டு பலமுறை விண்ணப்பிக்கிறார். நேரில் முதல்வரை சந்திக்க சென்னைக்கு கிளம்புகிறார். அங்கு பல பிரச்சனைகளை சந்தித்து மீண்டும் ஊருக்கே திரும்புகிறார்.
ஊருக்கு வந்த நாயகன் புது கலெக்டரின் ஆதரவால் தனது கண்டுபிடிப்பு வெற்றிகரமாக அரசு பார்வைக்கு செல்லும் என்று கலெக்டர் உறுதிமொழி தர சந்தோசத்தில் இருக்க எதிர்பாராத அதிர்ச்சி அவனை தாக்குகிறது. என்ன நடந்தது என்பது லைன் மேனின் மீதி கதை.
தந்தையாக அனுபவ நடிப்பில் சார்லி மிளிர்கிறார். இளம் விஞ்ஞானியாக தன் தாய்க்கு நேர்ந்த அவலம் மற்றவர்களுக்கும் நடக்கக்கூடாது என்று கண்டுபிடிப்பை அங்கீகாரம் பெற போராடும் இளைஞன் செந்திலாக ஜெகன் பாலாஜி, காதலியாக சரண்யா ரவிச்சந்திரன், விநாயகராஜ், அருண்பிரசாத், தமிழ், கலெக்டராக சில காட்சிகளில் அதிதி பாலன் படத்திற்கு தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் உப்பளம் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது வலியையும், அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒரு எளிய விஞ்ஞானியின் போராட்டத்தையும் திரைப்பட மொழியில் சிறப்பாக சொல்வதற்கு இயக்குநர் எம்.உதய்குமாருக்கு உறுதுணையாக பயணித்திருக்கிறார்கள்.
ஒரு சாதாரண மனிதன் தன் கண்டுபிடிப்புகளை அரசாங்கத்திற்கு கொண்டு செல்ல எவ்வளவு கஷ்டங்கள் எவ்வளவு தடங்கல்கள் என்பதை இந்த படத்தின் மூலம் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. பல அர்ப்பணிப்புகளை கடந்து தான் பல விஞ்ஞானிகள் நமக்கு பல அற்புதங்களை தந்திருக்கிறார்கள் என்பது இந்த கதையின் மூலம் நமக்கு தெளிவு படுத்துகிறது. அந்தவகையில் பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, வாழ்க்கையில் இத்தகைய போராட்டங்களுடன் பயணிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் படமாகவும் கொடுஹ்துள்ளார் இயக்குநர் எம்.உதய்குமார்.