காடுவெட்டி ; விமர்சனம்


நகரில் ஒரு நடுத்தர சமூகப் பெண்ணும் (சங்கீர்த்தனா விபின்) தாழ்த்தப்பட்ட சமூக இளைஞனும் (அகிலன்) காதலிக்கிறார்கள். அவர்களின் பெற்றோர் இருவரும் சரியான ஜோடி என்பதை அறிந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

அதேசமயம் கிராமத்தில் தெருக்கூத்து கலைஞரான சுப்பிரமணிய சிவாவின் மகள் வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவரை காதலித்துவிட்டதால், அவரை ஊர் வழக்கப்படி கொலை செய்துவிடுமாறும், இல்லை என்றால் அவள் தனக்கு பிறக்கவில்லை என்று சொல்லுமாறும், பஞ்சாயத்து வற்புறுத்துகிறது. பெற்றோர் என்ன முடிவெடுத்தனர் என்பது க்ளைமாக்ஸ்.

நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்து தன்னை நல்ல நடிகராக அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால், ஹீரோவாக நடிக்க தொடங்கியதில் இருந்து, கதை தேர்விலும், நடிப்பிலும் தடுமாறி வருகிறார். அந்த வகையில், இந்த படத்திலும் அதே தடுமாற்றத்துடன் தலைகாட்டுகிறார்.
தெருக்கூத்து கலைஞராக நடித்திருக்கும் சுப்பிரமணி சிவா, சாதி பெருமை பேசும் மக்களால், பெற்ற பிள்ளைகளை பறிகொடுக்கும் பெற்றோர்களை பிரதிபலிக்கும் வேடத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா பாண்டிலட்சுமி, விஷ்மயா விஷ்வாந்த், சாந்தி மாறன், சுப்பிரமணியம், அகிலன், சுபாஷ் சந்திரபோஸ், ஜெயம் எஸ்.கே,கோபி, சங்கீர்த்தனா விபின் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

வணக்கம் தமிழா சாதிக்கின் பாடல்கள் உணர்ச்சி ஏற்றுகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் சிறப்பு. கிராமச் சூழலைத் திரைக்குக் கொண்டு வர , குளம் , குட்டை, மரம், செடி , கொடி, தோப்பு, மலை என்று அட்டகாசமான கேமரா கோணங்களின் மூலம் சிறப்பான ஒளிப்பதிவு கொடுத்து அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் புகழேந்தி.

ஒரு காதல் ஜோடிக்கு நகரத்தில் கிடைக்கும் சந்தோஷம் கிராமத்தில் கிடைக்கும் வேதனை என இரண்டையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சோலை ஆறுமுகம். சென்னை போன்ற சிட்டியில் வாழும் காதலர்கள் அவர்களின் பெற்றோர்கள் பொருளாதாரத்தையும் கல்வியறிவையும் வைத்து ஜோடியை சேர்த்து வைக்கின்றனர்.

ஆனால் கிராமத்துக் காதலை பொருத்தவரை இரண்டு குடும்பங்கள் மட்டும் முடிவெடுக்க முடியாது.. அந்த சமூகம் சாதி பிரிவு என அனைத்து தரப்பு மக்களும் இதற்கு சம்மதிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் காதலர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தான் இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

நாடக காதலை மையக்கருவாக கொண்டு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சோலை ஆறுமுகம், தமிழ்நாட்டில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்தை வேறுமாதிரியாக சித்தரித்து காட்சிப்படுத்திய விதம் அவரிடம் இருக்கும் வன்மத்தை வெளிக்காட்டியிருக்கிறது.