காமி (GAAMI) ; விமர்சனம்


காசியில் சுற்றித்திரியும் நாயகன் விஷ்வக் சென்னின் உடல் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேரங்கள் செயலற்று போய் விடுவார். தனக்குள் இருக்கும் இத்தகைய பாதிப்பில் இருந்து மீள்வதற்காக வைத்தியர் ஒருவரை அவர் அணுகிறார். இதை குணப்படுத்த கூடிய அரியவகை காளான் ஒன்று இமயமலைப் பகுதியில் இருப்பதாகவும், 36 வருடங்களுக்கு ஒரு முறை வளரும் இந்த காளான் வளர்ந்த 24 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும் கூறுகிறார்.

அதன்படி, அந்த அதிசய காளான் குறித்து பல வருடங்களாக ஆய்வு மேற்கொள்ளும் மருத்துவர் சாந்தினி செளத்ரியுடன் சேர்ந்து, காளானை எடுப்பதற்காக நாயகன் விஷ்வக் சென், ஆபத்து நிறைந்த இமயமலைப் பகுதிக்கு பயணப்படுகிறார். இதற்கிடையே, அவரது நினைவுகளில், ஆபத்தில் இருக்கும் சிறுவன் தன்னை காப்பாற்றுமாறு சொல்வது போலவும், சிறுமி ஒருவரும் அடிக்கடி வருகிறார்கள். அவர்கள் யார்? எதற்காக தன் நினைவுகளில் வருகிறார்கள்? என்ற குழப்பத்தோடு தனது பயணத்தை தொடர, அங்கு பல்வேறு ஆபத்துகளையும் நாயகன் சந்திக்கிறார். அந்த ஆபத்துக்களை கடந்து காளானை அவர் எடுத்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.

நாயகன் விஸ்வக் சென், வித்தியாசமான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அகோரியாக வாழும் மனிதனின் மனநிலை எப்படி இருக்கும், அவரது உடல்மொழி என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் புரிந்து கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தனது தனித்துவத்தை நிரூபித்திருக்கிறார் நாயகன் விஸ்வக்.

நாயகி சாந்தினி தன்னால் முடிந்த முயற்சியைக் கொடுத்திருக்கிறார். நடிப்பில் ஈர்ப்பு கொண்டு வந்து அசத்தியிருக்கிறார் நடிகை அபிநயா. தனது மகளோடு சேர்ந்து வாழத்துடிக்கும் கதாபாத்திரத்தில் அதிகமாகவே கவனம் ஈர்த்திருக்கிறார். தேவதாசி வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்திருக்கின்றனர்.

ஆராய்ச்சிக் கூடத்தில் சித்ரவதைக்கு ஆளாகும் இளைஞனாக முஹம்மத் சமத். அவர் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும்போது பரிதாபத்தை அள்ளுகிறார்.

விஷ்வநாத் ரெட்டி செலுமல்லாவின் ஒளிப்பதிவு, நரேஷ் குமரன் பின்னணி இசை, ஸ்வீக்கர் அகஸ்த்தியின் இசையில் பாடல்கள், ராகவேந்திர திருனின் படத்தொகுப்பு என அனைத்தும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது விடுதலைக்கான ஏக்கம், வதைகளின் தீனமான ஒலி, சாகசம் மிகுந்த தருணங்களின் எழுச்சி ஆகிய உணர்வுகளைத் தனது பின்னணி இசையின் வழி கட்டியெழுப்பியிருக்கிறார் நரேஷ் குமரன்.

அறிமுக இயக்குநர் என நம்ப முடியாதபடி, ஊக்கம் மிகுந்த திரை அனுபவத்தை ‘காமி’ படத்தின் வழிக் கொடுத்திருக்கிறார் வித்யாதர் காகிடா. வழக்கமான பாணியிலிருந்து வித்தியாசமான கதை சொல்லல் மூலம் ஒரு திரை அனுபவத்தை வழங்க வேண்டும் என விரும்பி இருக்கிறார் இயக்குநர். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார் என சொல்லலாம்.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் VFX காட்சிகள் தான். இமயமலைப் பயணத்தையும், அதில் ஏற்படும் ஆபத்துக்களையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, மிக தத்ரூபமாக VFX பணிகளை மேற்கொண்டு அசத்தியிருக்கிறார்கள்.