ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படத்தை இயக்கிய சை.கெளதம ராஜ் கழுவேத்தி மூர்க்கன் படத்தை இயக்கியுள்ளார். இதில் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், முனிஸ்காந்த் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அதேபோல் டி.இமான் இசையமைத்துள்ளார்.
சிறுவயது முதலே அருள்நிதியும், சந்தோஷ் பிரதாபும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். உயர்ந்த சமூகங்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சந்தோஷ் பிரதாப் சமூகத்தை தள்ளி வைத்து வருகின்றனர். ஆனால் அருள்நிதி, நண்பனுக்காக எப்போதும் துணை நிற்கிறார். நண்பனை யாராவது இழிவு படுத்தினாலோ அடித்தாலோ அவர்களை துவசம் செய்கிறார்.
ஒரு கட்டத்தில் தன் சமூக இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து வந்த சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார். அந்த பழி அருள்நிதி மீது விழுகிறது. இதற்கு பின் என்ன ஆனது? கொலையை அருள்நிதி செய்தாரா? அதற்கு பின் இருக்கும் சூழ்ச்சி மற்றும் அரசியல் என்ன? என்பதை திரைக்கதை மூலம் நகர்த்தியுள்ளார் இயக்குனர்.
இருவேறு சமூகங்கள், அவர்களிடையேயான சாதியப் பாகுபாடு, ஒரே சமூகத்தின் இரண்டு பிரிவுகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், தங்களைச் சுற்றியிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை காட்சிப்படுத்தியதில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ மற்ற வழக்கமான கிராமத்து கதைகளிலிருந்து விலகி நிற்கிறது.
கோபக்கார வாலிபனாக அருமையாக நடித்திருக்கிறார் அருள்நிதி. கதாபாத்திரத்தை புரிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பு சிறப்பு.
சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை அடுத்து இந்த படத்திலும் அருமையாக நடித்திருக்கிறார் துஷாரா விஜயன். அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். சாயா தேவி, முனிஷ்காந்த், சுப்ரமணியன் ஆகியோரின் நடிப்பையும் பாராட்டியே ஆக வேண்டும்.
மொத்தத்தில் வழக்கமான கிராமத்து கதைக்கான திரைக்கதை மொழி கையாளப்பட்டிருந்தாலும், உள்ளடக்கத்திலும் சொல்ல முனைந்திருக்கும் விஷயங்களிலும் படம் புதுமை சேர்த்திகிறது.